

தனது தயாரிப்பில் உருவாகியுள்ள 'வா டீல்', 'அண்டாவ காணோம்' ஆகிய படங்கள் டிஜிட்டல் வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அறிவித்துள்ளார்.
2012-ம் ஆண்டிலிருந்து தயாரிப்பில் இருந்து வரும் படம் 'வா டீல்'. ரத்ன சிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
அதே போல், ஸ்ரேயா ரெட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அண்டாவ காணோம்' படமும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. டீஸர், ட்ரெய்லர் என வெளியிடப்பட்டு, விளம்பரப்படுத்தி இன்னும் வெளியாகவில்லை.
இந்த இரண்டு படங்களின் உரிமையும் ஜே.எஸ்.கேவிடம் இருக்கிறது. தற்போது தயாராகியுள்ள படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தன்னிடம் இருக்கும் 'அண்டாவ காணோம்', 'வா டீல்' மற்றும் 'மம்மி சேவ் மீ' ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார் ஜே.சதீஷ் குமார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"ஜேஎஸ்கே பிலிம்ஸ் நிறுவனத்தின் படங்களான 'அண்டாவ காணோம்', 'வா டீல்', 'மம்மி சேவ் மீ' ஆகியவை விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளன. அதே போல் விரைவில் 3 பெரிய படங்களைத் தயாரிக்கவுள்ளோம். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். உங்களுடைய ஆதரவு தேவை".
இவ்வாறு ஜே.சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.