

மீம் கிரியேட்டர்களுக்கு நடிகர் விவேக் தனது சமூக வலைதள பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இறுதிக்கட்டப் பணிகள், சின்னத்திரை படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. இதனால் நடிகர்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் செய்திகள் மற்றும் தகவல்களை வைத்து மீம்ஸ்கள் கொட்டிக் கிடக்கிறது. சமீபத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்ட போது, பலரும் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டு வந்தார்கள்.
மொத்தத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு இந்த கரோனா காலத்துச் செய்திகள் எல்லாம் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. சிலர் மீம்ஸ்களில் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்தை வைத்து உருவாக்கியுள்ளனர். இதற்காக விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் விவேக் கூறியிருப்பதாவது:
"நாடு முழுவதுமுள்ள அனைத்து மீம் கிரியேட்டர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், சிலரையோ அல்லது சிலரின் யோசனைகளையோ கேலி செய்ய பாரத ரத்னா டாக்டர் அப்துல கலாம் அய்யாவின் படங்களை உங்கள் மீம்களில் பயன்படுத்த வேண்டாம். நாம் அனைவரும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அவரை மதிக்கவேண்டும். இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அவர் ஒரு வழிகாட்டி."
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.