

மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், ராதிகா, வம்சி கிருஷ்ணா, சதீஷ், டிடி உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக வெளியிடப்பட்ட டீஸர், பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
மேலும், பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பெரும் பொருட் செலவில் தயாரான இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை இயக்கினார் கெளதம் மேனன்.
'துருவ நட்சத்திரம்' படத்தின் நிலை தொடர்பாக அவ்வப்போது பதிலளித்து வந்தார் கெளதம் மேனன். தற்போது 'ஒரு சான்ஸ் குடு' பாடல் தொடர்பான நேரலையில் 'துருவ நட்சத்திரம்' படம் தொடர்பான கேள்விக்கு கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:
"'துருவ நட்சத்திரம்' படத்தை முடித்து, வெளியிடுவதற்கான வேலைகள் போயிட்டு இருக்கு. இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் விக்ரம் சார் டப்பிங் பண்றேன் எனச் சொல்லியிருக்கிறார். பெரிய படம் அது. நிறைய பிரச்சினைகளுக்குப் பிறகு, வெளியீட்டுக்கு ஒரு சின்ன வெளிச்சம் கிடைத்துள்ளது"
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
மேலும், அமேசான் ப்ரைம் தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை உருவாக்கவுள்ளார் கெளதம் மேனன். ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸுக்காக ஒரு தமிழ் ஆந்தாலஜி (குறும்படங்களின் தொகுப்பு) திரைப்படத்தில் தனது பங்கை முடித்துக் கொடுத்துள்ளார்.