திரை விமர்சனம்- யாமிருக்க பயமே

திரை விமர்சனம்- யாமிருக்க பயமே
Updated on
2 min read

காமெடியும் த்ரில்லரும் கலந்த ஒரு கதையை லாஜிக் இல்லாமல் மேஜிக்காகக் காட்டியிருக்கும் படம்தான் யாமிருக்க பயமே.

திகில் நகைச்சுவைப் படம் எடுக்க முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் டிகே. ஆனால் சராசரிப் படங்களில் மலிந்திருக்கும் கிளி ஷேக்களின் ஆதிக்கம் இந்தப் படத்திலும் உண்டு.

கிரண் (கிருஷ்ணா) எடுக்கும் விளம்பரப்படம் அவனை ஒரு ரவுடியின் பிடியில் சிக்கவைக்கிறது. அந்த நேரத்தில் ஒரு மலைப்பிரதேசத்தில் உள்ள மூதாதையர் சொத்து அவனுக்குக் கிடைக்கிறது. தன் காதலி ஸ்மிதாவுடன் (ரூபா மஞ்சரி) கொள்ளியூர் செல்கிறான்.

சொத்துக்காகச் சரண்யாவும் (ஓவியா), அவரது அண்ணன் சரத்தும் (கருணாகரன்) கிரணுடன் சேர்ந்துகொள் கிறார்கள். நால்வரும் சேர்ந்து பாழடைந்த பங்களாவை ஓட்டலாக மாற்றுகிறார்கள். பங்களா ஓட்டலில் தங்க வரும் ஒவ்வொரு விருந்தினரும் சாகிறார்கள். எப்படிச் சாகிறார்கள் என்று தெரியாமல் நால்வரும் தவிக்கிறார்கள். மேலும் பல மர்மங்கள் கட்டவிழ்கின்றன. பெரும் ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர் கிறார்கள்.

அதற்கு என்ன காரணம் எனக் கண்டு பிடித்தார்களா? சொத்தைத் தக்கவைத்தார்களா? இதுதான் படத்தின் கதை.

ஒரு த்ரில்லர் கதையைப் பயமுறுத்தி யும், சிரிக்க வைத்தும் கொடுக்கப் புது இயக்குனர் டீகே முயற்சித்திருக்கிறார். தொடக்கத்தில் ‘பவர் ஸ்டார்’ மாத்திரையை வைத்து அருவருப்பும் கலகலப்புமாகத் தொடங்கும் படத்தில், கடைசிக் காட்சி வரையிலும் சிரிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சாவையும் சிரிக்கும் விதத்தில் எடுத் தது ஒரு புறம் இருக்கட்டும். ‘பன்னி மூஞ்சி வாயா’ என்ற வசனம் ஆபாச வசனங்களைவிடவும் அருவருப்பூட்டு கிறது. தோற்றத்தை வைத்து இன்னும் எத்தனை நாள்தான் ஒரு மனிதரை இழிவுபடுத்திக் கொண்டிருக்கப்போகிறார்கள்?

த்ரில்லர் கதை என்றாலும், ஒரு இடத்திலும் நகத்தைக் கடிக்க வைக்கும் காட்சிகள் இல்லாதது பெரிய குறை. பேய் பங்களா, கொலைகள், திடீர் பாட்டுச் சத்தம் என எதிலும் அழுத்தம் இல்லை. கொலைகளும் வேடிக்கையாகவே காட் டப்படுவதால் திகிலுக்கு அதிக இடமில்லை.

பேய் வாழும் ஒரு வீட்டில் குடியேறும் மனிதர்களைப் பேய் கொலை செய்யாமல் பூச்சாண்டி காட்டுவதிலேயே குறியாக இருக்கிறது. அந்த வீட்டுக்கு யாரெல்லாம் உரிமையாளர்களாக மாறுகிறார்களோ அவர்களையெல்லாம் சாகடிக்கும் பேய், கிரணையும் அவர்களுடன் இருப்ப வர்களையும் மட்டும் ஒன்றும் செய்யாதது பெரிய ஓட்டை.

அனஸ்வரா அழகான பேயாக வருகிறார். ஆனால், அவர் ஏன் பேயாக மாறினார்? அவருக்கும் அந்தப் பங்களாவுக்கும் அப்படி என்னத் தொடர்பு? பரட்டைத் தாத்தா பங்களாவில் இருந்து வெளியேற முடியாமல் இருப்பது ஏன்? எனப் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், அதற்குப் படத்தில் விடை இல்லை.

கடந்த படங்களில் எல்லாம் முகத்தை உர்...ரென வைத்துக் கொண்டு வந்த கிருஷ்ணா இந்தப் படத்தில் திருதிரு வென முழிப்பதும், காமெடி செய்வதுமாக முன்னேறியிருக்கிறார். அவருக்கு இணையாகக் கருணாகரனும் படத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

நாயகி ரூபா மஞ்சரியும், ஓவியாயாவும் எப்போதும் குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள். ஓவியா உடையில் சிக்கனமும் கவர்ச்சியில் தாராளமுமாக வலம் வருகிறார்.

பயமுறுத்தும் காட்சிகள் தரமான கிராபிக்ஸுடனும் சிறப்பு ஒப்பனையுடனும் நன்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன. பேய் வரும் காட்சிகளை நறுக்கென்று கத்தரித்தி ருக்கும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் திறமை பளிச். பின்னணி இசையில் பிரசாத்தின் உழைப்பு தெரிகிறது. பேய் நகைச்சுவை இரண்டை யும் ஒன்றாக கலக்க விரும்பிய இயக்கு நர், அதற்காக ஆபாச நகைச்சுவையை மட்டுமே அதிகம் நம்பியிருக்கிறார். முழுக்க முழுக்கப் பேய்க் காட்சிகளை மட்டும்மே நம்பாமல் ஒரு பேய்ப் படத்தைத் தர முயன்று வெற்றிபெற்றதற்காக இயக்கு நரைப் பாராட்டலாம். பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய தொழில்நுட்ப விஷயங்கள் ஒன்றிணைந்து பயணிப்பது திகில் படத்துக்கு அவசியம். அது இந்தப் படத்தில் சரியாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸை நீட்டி முழக்காமல் சட்டென்று முடித்துவிடுவது கச்சிதம்.

திகில் காமெடி என்னும் வகையில் படம் சரியாகப் பொருந்துகிறது. சில சமயம் திகிலையே காமெடியாக்குவதையும் காமெடி நாகரிக எல்லைகளை மீறுவதையும் தவிர்த்திருக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in