

'நான் கடவுள்' படத்தின் காட்சிகளாக 3 நாளில் பத்மாசனம் என்ற யோகாவை கற்றுக் கொண்டு பாலாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஆர்யா.
'நான் கடவுள்' படத்தில் ஆர்யாவின் அறிமுக காட்சியில் பத்மாசனம் என்ற யோகாவை தலைகீழாக பண்ணியிருப்பார் ஆர்யா. அதை கற்றுக் கொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருஷமாகும். ஆனால், ஆர்யா அந்த யோகாவை 30 நாட்களில் கற்றுக் கொண்டேன் என்று மற்றவர்களிடம் கூறினாலும், இயக்குநர் பாலா கொடுத்தது வெறும் 3 நாட்கள் தான். 3 நாட்களில் சாத்தியமே இல்லை என்று பாலா நினைத்தார். ஆனால், மூன்று நாட்களில் கற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார் ஆர்யா.
அதிலும், தலைகீழாக நிற்கும் போது, ரவுண்ட் டிராலி போட்டு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சுமார் 5 நிமிடங்கள் தலைகீழாக நின்று கஷ்டப்பட்டு நடித்து, பாலாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஆர்யா.
'நான் கடவுள்' படப்பிடிப்பு இறுதிகட்டத்திற்கு வந்தது. ராஜேந்திரன் உடனான சண்டை முடிந்தவுடன், குகையில் ஆர்யா யோகாவில் இருப்பது போல ஒரு காட்சி. அக்காட்சி படமாக்கும்போது, உதவி இயக்குநர் பாலாவிடம் "சார்.. ஆர்யா புதுமையாக ஏதோ ஒரு யோகா கற்று இருக்கிறாராம். அதை செய்யலாமா என்று கேட்க சொன்னார்" என்று கூற, பாலாவும் "பத்மாசனத்தை மிஞ்சிய ஒரு யோகாவா பண்ணச் சொல்லு பார்க்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
பத்மாசனம் போல காலில் வணக்கம் சொல்வது போல நின்றிருக்கிறார். ஆர்யா பண்ணிய அந்த யோகாவைப் பார்த்து சிலிர்த்து போயிருக்கிறார் இயக்குநர் பாலா. அதிலும் ஆர்யா அந்த யோகாவை பண்ணியது ஒரு பாறையின் மீது. அங்கிருந்து விழுந்தால் 30 அடி பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும். அந்த யோகா காட்சியை காட்சிப்படுத்தியவுடன் ஆர்யாவை வெகுவாக பாராட்டியிருக்கிறார் பாலா.
முந்தைய பாகம்: >அறுந்த ரீலு 13: வித்யா பாலனின் 'அலறல்' பின்னணி!