

கேரளாவில் யானை பலியானது சர்ச்சை ஆகியிருக்கும் வேளையில், அது தொடர்பாக இயக்குநர் லிங்குசாமி காட்டமான கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதான கருவுற்ற யானை, உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றது. அந்த கிராம மக்கள் யானைக்குப் பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர். ஆனால் சில விஷமிகள், அன்னாசிப் பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்குக் கொடுத்துள்ளனர்.
அதை யானை சாப்பிட்ட போது பட்டாசு வெடித்துச் சிதறி, வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அலறிய யானை அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. பின்பு 2 கும்கி யானைகளின் உதவியுடன் கருவுற்ற யானையை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், தொழில்துறை பிரபலங்கள் என அனைவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இயக்குநர் லிங்குசாமி கவிதை ஒன்றை எழுதிப் பகிர்ந்துள்ளார்.
அந்தக் கவிதை:
"கடைசியில் அவனைக் கண்டறிந்த பிறகு
என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற பல
யோசனைகளுக்குப் பிறகு
ஒரு முடிவுக்கு வந்தேன்
ஒரு தந்தம் கொண்டு நடு முதுகில் யானை
பலம் கொண்டு இறக்கினேன்
இன்னொரு தந்தம் கொண்டு கீழ்வழியாக
மேல்நோக்கி ஏற்றினேன்
அப்போதும் தீர்ந்தபாடில்லை கோபம்
ஏனெனில் அவன் கர்ப்பம்
தரித்திருக்கவில்லை".
இவ்வாறு லிங்குசாமி எழுதியுள்ளார்.