

தான் நடித்து வரும் 'தலைவி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்று கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், திரையரங்குகள் உட்பட மக்கள் கூட்டம் சேரும் எல்லா இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கால் தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், இறுதிக் கட்டத்தில் இருக்கும் திரைப்படங்கள், அரங்கில் வெளியான திரைப்படங்கள் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஊரடங்கு தொடரும் என்றும், அப்படியே ஊரடங்கு ரத்தானால் கூட கரோனா அச்சம் காரணமாக மக்கள் மீண்டும் கூட்டமாகச் சேருவது கடினம் என்றும் கூறப்படுகிறது. எனவே ஓடிடி தளங்களில் நேரடியாகத் திரைப்படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். அப்படி கடந்த வாரம் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியானது.
இந்நிலையில் இன்னும் பல திரைப்படங்கள் ப்ரைமில் வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் 'தலைவி' திரைப்படமும் ஒன்று. இந்தப் படத்தில் நாயகியாக கங்கணா ரணாவத் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவது குறித்து அவரது கருத்து என்ன என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது, "அது படத்தைப் பொறுத்தது. உதாரணத்துக்கு, 'தலைவி' போன்ற ஒரு படம் நேரடியாக டிஜிட்டலில் வெளியாகாது. ஏனென்றால் அது அப்படியொரு பிரம்மாண்டமான படம். அதேபோல நான் நடித்த 'மணிகார்ணிகா' போன்ற பிரம்மாண்டமான படத்தையும் வெளியிட முடியாது.
ஆனால், 'பங்கா', 'ஜட்ஜ்மெண்டல் ஹாய் க்யா' ஆகிய படங்கள் டிஜிட்டல் தள ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். டிஜிட்டலிலிருந்து அந்தத் தயாரிப்பாளர்கள் நிறைய வருவாய் பெற்றிருக்கின்றனர். எனவே அது படத்துக்குப் படம் மாறும்" என்று கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.
மேலும் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் 'தலைவி' திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு தளங்களுக்கும் ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.