

அனுராக் காஷ்யப் ஒரு முட்டாளன்றி வேறு ஒன்றுமில்லை என்று ஒளிப்பதிவாளர் நட்ராஜ் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
இந்தித் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் நட்டி (எ) நட்ராஜ். தமிழ், தெலுங்கில் சில படங்களுக்கே ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரும், இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாகத் திரையுலகில் அறிமுகமானார்கள்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ளாக் ஃப்ரைடே' படத்துக்கு நட்ராஜ் தான் ஒளிப்பதிவாளர். அந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. ஆனால், தான் அளித்த பேட்டிகளில் அனுராக் காஷ்யப் உடனான நட்பைப் பற்றிப் பெருமையாகவே பேசியிருந்தார் நட்ராஜ்.
இதனிடையே நேற்று (ஜூன் 4) இரவு தனது சமூக வலைதளத்தில் அனுராக் காஷ்யப்பைச் சாடி சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"'சத்யா' படத்தின் பல கதாசிரியர்களில் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். அதன் பிறகு எங்களோடு சேர்ந்து 'பான்ச்' படத்தை உருவாக்கினார். அதற்காக நான் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் அவரை ஆதரித்தேன். 'லாஸ்ட் ட்ரெய்ன் டு மஹாகாளி' படத்துக்காகவும் நான் சம்பளம் பெறாமல் வேலை செய்தேன். எல்லாமே அவருக்காகத்தான் செய்தேன்.
அவர் தனது அத்தனை நண்பர்களையும் தன் வட்டத்திலிருந்து தள்ளியே வைத்திருந்தார். 'ப்ளாக் ஃப்ரைடே' படத்துக்காக நான் அவருக்காக நான் அப்படி உழைத்தேன். பலரும் கடுமையாக உழைத்தனர். ஆம், அனுராக் என்னை மறந்துவிட்டு அர்த்தமில்லாமல் பேசுகிறார். அவரோடு பணியாற்றியவர்களைக் கேளுங்கள். அவர் ஒரு முட்டாளன்றி வேறு ஒன்றுமில்லை. முட்டாள்கள் முட்டாள்களாகவே இருப்பார்கள்.
நான் ஒரு சுயநலவாதியைப் பற்றிப் பேசினேன். அது அனுராக் காஷ்யப் தான். நான் உண்மையைக் கூறுகிறேன். ஆனால் யாரும் கேட்க விரும்பவில்லை. என்ன செய்வது. எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நான் உண்மையைச் சொல்கிறேன்".
இவ்வாறு ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.