

சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநரை நியமித்ததற்காக மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு நடிகர்ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது. இந்தப் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிவரும் ஆர்.சந்திரசேகரனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழில் அமைச்சர் பதில்
அந்த கடிதத்தில், ‘தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கு தாங்கள் மேற்கொள்ளும் பெருமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரனை நியமித்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு தமிழில் பதில் அளித்துள்ளார். அதில், ‘நமது பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையில், பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதிகொண்டிருக்கிறோம்.
தமிழ்மொழியை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் மத்தியஅரசு பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.