

தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அமேசானில் வெளியிட வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கவுள்ளார் மணிரத்னம்
தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராஜேஷ், த்ரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் சுமார் 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியானவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் சுமார் 100 நடிகர்கள் இருப்பது மாதிரியான கதை, போர்க் காட்சிகள் என படமாக்க வேண்டியதிருப்பதால் இது எப்படி சாத்தியமாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
'பொன்னியின் செல்வன்' படத்துக்கு முன்பாக 'ரோஜா 2' இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியானது. அதற்கு மணிரத்னம் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தற்போது, அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக வெப் சீரிஸ் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
அமேசானில் வெப் சீரிஸாக வெளியாகவுள்ள இதன் பணிகள், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் என 5 இயக்குநர்கள் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 4 இயக்குநர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். இதில் ஒரு கதையை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் அரவிந்த் சாமி.
இந்த வெப் சீரிஸ் மூலமாக வரும் பணத்தை தொழிலாளர்களின் நலனுக்காகக் கொடுக்க மணிரத்னம் திட்டமிட்டு இருக்கிறார். இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்தக் குறும்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பட்டியல் உள்ளிட்ட விவரங்களும் விரைவில் தெரியவரும். மணிரத்னத்தின் இந்த முயற்சி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.