

எனது சேவை குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டதாக நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து பல்வேறு வழிகளில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். ஆனால், சில தினங்களுக்கு முன்பு அசோக் நகரில் லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கரோனா தொற்று இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் 21 பேருக்கு தொற்று இருப்பதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக லாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "ஆதரவற்ற குழந்தைகளுக்காக நான் ஒரு அறக்கட்டளை நடத்துவதை நீங்கள் அறிவீர்கள். ஒரு வாரம் முன்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. பரிசோதனையில் 13 குழந்தைகள் 3 ஊழியர்கள், 2 மாற்றுத் திறனாளி ஊழியர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அனைத்து குழந்தைகளும் திரும்பியுள்ளனர். இந்த சந்தோஷத்தை லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"நண்பர்களே, ரசிகர்களே, ஒரு நல்ல செய்தியை உங்களுடன் பகிர விரும்புகிறேன். கரோனா தொற்றுக்காக சிகிச்சையிலிருந்த எனது அறக்கட்டளையின் குழந்தைகளுக்கு தற்போது தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்திருப்பதால் அவர்கள் பாதுகாப்பாக மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
உடனடியாக உதவி செய்த அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்களுக்கும், மாநகராட்சி ஆணைய ஜி பிரகாஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தன்னலமற்ற சேவை புரிந்த அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி. நான் நம்பியது போலவே, எனது சேவை என் குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சேவையே கடவுள்"
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.