

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ளனர்.
'பொன்னியின் செல்வன்' மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 'கோப்ரா' இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. இன்னும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது.
இதனிடையே இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து உருவாகவுள்ள 'விக்ரம் 60' படத்தை உறுதி செய்திருக்கிறார் விக்ரம். இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, லலித் தயாரிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமான 'ஆதித்ய வர்மா' விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால் அடுத்ததாக அப்பாவுடன் இணைந்து களமிறங்குகிறார் துருவ் விக்ரம்.
இந்தப் படத்தில் விக்ரம் - துருவ் விக்ரமுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.