

'2.0' படத்துக்காக அர்னால்டிடம் நடந்த பேச்சுவார்த்தை பின்னணியில் நடந்தது குறித்து விஸ்வநாத் சுந்தரம் பகிர்ந்துள்ளார்.
'பாகுபலி' படங்களில் காட்சி மேம்பாட்டு கலைஞராக பணிபுரிந்தவர் விஸ்வநாத் சுந்தரம். இந்தப் படங்களில் ராஜமெளலி ஒரு காட்சியைக் கூறினால் அந்தக் காட்சியை எப்படியெல்லாம் உருவாக்கலாம் என்று சிந்தித்துப் படமாக வரைந்துக் கொடுக்க வேண்டும். அதிலிருந்து மெருக்கேற்றி ராஜமெளலி படமாக்குவார். இவரது சில படங்கள் அப்படியே காட்சியாகவும் வந்துள்ளது.
'பாகுபலி' படத்தைப் போலவே '2.0' படத்திலும் பணிபுரிந்துள்ளார் விஸ்வநாத் சுந்தரம். இவர் வரைந்து கொடுத்த படத்தை வைத்துத் தான், முதலில் அர்னால்ட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது '2.0' படக்குழு. பட்ஜெட் பிரச்சினையால் அர்னால்ட்டுக்கு பதிலாக அக்ஷய் குமார் நடித்தார்.
இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து, 'இந்து தமிழ் திசை' இன்ஸ்டாகிராம் நேரலையில் விஸ்வநாத் சுந்தரம் கூறியிருப்பதாவது:
"'பாகுபலி' படத்துக்காக பணிபுரிந்துக் கொண்டிருக்கும் போது கிராபிக்ஸ் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் மோகன் அழைத்தார். ஒரு ஸ்டைலிஷான பிரம்மாண்டமான படம் இருக்கிறது சொல்றேன் என்றார். வழக்கமான கதையைத் தாண்டி சில இயக்குநர் மட்டுமே எடுக்கிறார்கள். ராஜமெளலி சார் வரலாற்று பிரம்மாண்ட படங்கள் என்றால், ஷங்கர் சார் தொழில்நுட்ப பிரம்மாண்ட படங்கள் எடுத்து வருகிறார். கதையைக் கேட்டவுடனே ரொம்பவே சந்தோஷப்பட்டேன். தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி, ஷங்கர் சாருடன் மீட்டிங் அரெஞ்ச் பண்றேன் என்றார். அவருடைய சந்திப்பே மகிழ்ச்சியாக இருந்தது. மொத்த கதையை ரொம்பவே அழகாக சொன்னார்.
அர்னால்ட்டை நடிக்க வைக்க ஒன்று தயார் செய்ய வேண்டும் என்றார்கள். அக்ஷய் குமார் கதாபாத்திரத்தில் முதலில் அர்னால்ட்டிடம் தான் பேசினார்கள். அர்னால்ட் உடைய உடலமைப்புக்கு அந்த கதாபாத்திரம் வேறு லெவலில் இருந்தது. அர்னால்ட் பக்ஷிராஜனாக நடித்தால் எப்படியிருக்கும் என்று சில படங்கள் வரைந்து கொடுத்தேன். அதை அர்னால்ட்டிடம் காட்டியவுடன், ரொம்ப நன்றாக இருக்கிறது. இந்தப் படங்கள் எனக்கு கிடைக்குமா எனக் கேட்டிருக்கிறார்.
இது கதை சார்ந்த புகைப்படம் என்பதால் தர இயலாது என்று ஷங்கர் சார் சொல்லிவிட்டார். அப்போது ஸ்ரீனிவாஸ் மோகனிடம் "விஸ்வநாத்துக்கு நான் நன்றி சொன்னேன் எனச் சொல்லிவிடுங்கள்" என்று ஷங்கர் சார் சொல்லியிருக்கிறார். சூப்பர் ஸ்டாரும் அவரும் இணைந்து நடித்திருந்தால் அந்தப் படம் வேறு லெவலில் இருந்திருக்கும். ஆனால் எதனாலோ அது நடைபெறவில்லை. இறுதியில் அக்ஷய் குமார் நடித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது"
இவ்வாறு விஸ்வநாத் சுந்தரம் தெரிவித்தார்.