போலியான நடிகர்கள் தேர்வு விளம்பரம்: இயக்குநர் கார்த்திக் நரேன் காட்டம்
போலியான நடிகர்கள் தேர்வு விளம்பரம் தொடர்பாக இயக்குநர் கார்த்திக் நரேன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான படம் 'துருவங்கள் பதினாறு'. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்துக்குப் பிறகு 'நரகாசூரன்' மற்றும் 'மாஃபியா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். இதில் 'நரகாசூரன்' படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது தனுஷை இயக்கவுள்ள படத்துக்காக தயாராகி வருகிறார் கார்த்திக் நரேன்.
கரோனா ஊரடங்கு முடிந்தவுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊரடங்கில் பாடல்கள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் கார்த்திக் நரேன். தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இதனிடையே, தனுஷ் படத்துக்கு நடிகர்கள் தேர்வை வேறொரு நபர் வெளியிட்டும், பணம் கேட்டும் வருவது கார்த்திக் நரேன் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கார்த்திக் நரேன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ஒரு வாட்ஸப் நம்பரின் (9777017348) மூலம் என் பெயரைப் பயன்படுத்தி ஒரு நபர் போலியான ஒரு நடிகர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டும், என் அடுத்த படத்தில் நடிக்க பணம் கேட்டும் வருவதாக என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. தயவுசெய்து அந்த நம்பரை பிளாக் செய்து, அதிலிருந்து உங்களுக்கு ஏதேனும் மெசேஜ் வந்தால் புகார் செய்யுங்கள். இந்த ஏமாற்று வேலையைச் செய்பவர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்"
இவ்வாறு கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
