

ஒரு நடிகான நான் ஜெயித்து விட்டேன் என்று தனது தயாரிப்பு நிறுவனத் தொடங்க விழாவில் நடிகர் அருண ்விஜய் தெரிவித்தார்.
'என்னை அறிந்தால்' படத்தின் விக்டர் பாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் அருண் விஜய். நாயகனாக நடித்திருக்கும் 'வா டீல்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், அருண்விஜய் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'In Cinema Entertainment' என்று தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயரிட்டு இருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனத் தொடக்க விழாவில் அருண் விஜய் பேசியது:
"எனது திரையுலக பயணத்தில் நான் அடுத்த கட்டத்துக்கு போயிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. 'In Cinemas Entertainment' என்ற நிறுவனம் தொடங்கியிருக்கிறேன். புதிய இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்பது தான் எண்ணம்.
பெரிய நடிகர்கள் இல்லாத படமும் கூட மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பெரியளவில் வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படமும், கன்னடத்தில் புனித் ராஜ்குமார் சாருடன் ஒரு படமும் நடித்து வருகிறேன். இரண்டு மொழிகளிலும் இப்போது தான் அறிமுகமாக இருக்கிறேன்.
இரு மொழிகளிலும் என்னுடன் பணியாற்றுபவர்கள் அனைவருமே தமிழ் திரையுலகைப் பற்றி அவ்வளவு பெருமையாக பேசுகிறார்கள். ஒரு ஃபார்முலாவில் சிக்கிக் கொண்டோம், ஆனால் தமிழ் சினிமா அப்படியில்லை. புதிய முயற்சிகளுக்கு கூட நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.அந்த பெருமை அனைத்துமே தமிழ் ரசிகர்களுக்கு தான்.
'என்னை அறிந்தால்' படத்துக்குப் பிறகு வில்லனாக தான் பண்ணுவீர்களா என்று கேட்டார்கள். நாயகனாக தோல்வியுற்று வில்லனாக பண்ண வேண்டும் என நான் வரவில்லை. ஒரு நல்ல இயக்குநரோடு பணியாற்ற வேண்டும் என்று தான் 'என்னை அறிந்தால்' படத்தை எடுத்துக் கொண்டேன். அடுத்ததாக 'வா டீல்' படம் வெளியாக இருக்கிறது. வாரத்துக்கு நிறைய படங்கள் வருகிறது, ஆகையால் சரியான தேதி பார்த்து வருகிறோம். செப். மாத இறுதி அல்லது அக். மாத முதல் வாரத்தில் வெளியாகும்.
நிறைய கதைகளைக் கேட்டு வருகிறோம். விரைவில் கதை தேர்வு முடிவு செய்யப்பட்டு, நவம்பரில் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். நாயகனாக எந்த ஒரு படத்தையும் நான் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. கெளதம் மேனன் ஒரு படம் பண்ணலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தியில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவான உடன் முறைப்படி அறிவிக்கிறேன். ஒரு நல்ல நடிகனுக்கு மொழி தடையில்லை என்பதை பலர் நிரூபித்திருக்கிறார்கள். ஒரு நடிகனாக நான் ஜெயித்துவிட்டேன்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் தற்போது நான் நிறைய படங்கள் ஒத்துக் கொள்ள முடியும். நிறைய படங்கள் வருகிறது. எனக்கு அது முக்கியமில்லை. அடுத்த ஆண்டு மத்தியில் நான் எந்த இடத்தை அடைய வேண்டும் என்று நினைத்தேனோ அதை அடைந்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." என்று தெரிவித்தார் அருண் விஜய்