

தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று நடிகர் பிரசன்னா சாடியுள்ளார்.
இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி சுமார் 50 நாட்கள் அளவுக்கு எந்தப் பணிகளுமே நடைபெறவில்லை. தற்போது தான் தொழில்துறையினர் 50% பணியாளர்களுடன் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்த் திரையுலகில் இறுதிக்கட்டப் பணிகளுக்கும், சின்னத்திரை படப்பிடிப்புக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த கரோனா அச்சுறுத்தல் காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு அதிமுகவினரும் தகுந்த பதிலடிக் கொடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் அறிக்கையாகக் கொடுக்கும், அதிமுகவினர் தொலைக்காட்சி பேட்டிகளில் பதிலளிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது.
தற்போது முன்னணி நடிகரான பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசன்னா "இந்த கோவிட் ஊரடங்கின் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரசன்னாவின் இந்தப் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஒரு நடிகர் முதன்முறையாக உண்மையை வெளிப்படுத்தி இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.