Published : 02 Jun 2020 16:34 pm

Updated : 02 Jun 2020 16:35 pm

 

Published : 02 Jun 2020 04:34 PM
Last Updated : 02 Jun 2020 04:35 PM

ஒளிப்பதிவாளர் திரு பிறந்தநாள் ஸ்பெஷல்: கொண்டாடப்பட வேண்டிய ஒளிக்கலைஞன்

cinematographer-thiru-birthday-special

இசைஞானி இளையராஜா, புகழ்பெற்ற இயக்குநர் மணிரத்னம் இருவருக்கும் ஜூன் 2 அன்று பிறந்தநாள் என்பது பலருக்குத் தெரியும். ஒரு திரைப்படத்துக்கு இயக்குநரும் இசையமைப்பாளரும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானவர் ஒளிப்பதிவாளரும். இயக்குநர் கற்பனைக்கு காட்சி வடிவம் கொடுப்பவர் ஒளிப்பதிவாளர்தான். அந்த வகையில் இயக்குநர்கள். இசையமைப்பாளர்களைப் போலவே தமிழ் சினிமாவில் பல ஒளிப்பதிவாளர்களும் கோலோச்சி இருக்கிறார்கள். மொழி, பிராந்திய எல்லைகளைக் கடந்து ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஈர்த்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான திரு இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஸ்ரீராமின் சீடர் கமலின் கண்டுபிடிப்பு

திருநாவக்கரசு என்ற இயற்பெயர் கொண்ட திரு, கிராமத்தில் பிறந்து அறிவியல் படித்தவர். ஒளிப்படங்கள் எடுப்பதன் மீதான ஆர்வம் ஒளிப்பதிவின் மீதான ஆர்வமாக மாறியது. 80-களில் தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு தரத்தில் மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்திய ஒளி ஓவியர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அவருடன் சில படங்களில் பணியாற்றியவரும் திறமைகளை அடையாளம் காண்பதில் வல்லவருமான கமல்ஹாசன் திருவை தான் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக்கினார்.

கமல் அரிய திறமைசாலிகளை அடையாளம் காண்பதோடு நிற்பதில்லை. அந்தத் திறமைசாலிகளைத் தொடர்ந்து தன் படங்களில் பயன்படுத்திக்கொள்வார். அதற்கு திருவும் விதிவிலக்கல்ல. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கமலுடன் ஒன்றுக்கு மேம்பட்ட படங்களில் பணியாற்றுபவர்களின் அரிதான திறமைகள் இருக்கின்றன என்று புரிந்துகொள்ளலாம். ’காதலா காதலா’, ‘ஹே ராம்’, ‘ஆளவந்தான்’ என மொத்தம் நான்கு படங்களில் கமலுடன் பணியாற்றினார் திரு.

கங்கையின் விஸ்தாரமும் கொல்கத்தாவின் நெரிசலும்

இவற்றில் ’ஹே ராம்’ கமல் இயக்கிய படம். அவருடைய கனவுப் படைப்புகளில் ஒன்று ‘ஹே ராம்’. அவருடைய ஒட்டுமொத்த திரைவாழ்வில் முக்கியமான படம். தமிழ் சினிமா வரலாற்றில் அப்படி உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் பிரம்மாண்டத்துக்கு புதிய எல்லை வகுத்த படம். படத்தின் பெரும்பகுதி இந்திய சுதந்திரம் பெற்ற முதல் ஆண்டில் நிகழ்கிறது. நிகழ்காலப் பகுதி கறுப்பு வெள்ளையில் இடம்பெறும். மொகஞ்சதாரோ அகழாய்வு தளம்.

கொல்கத்தா, டெல்லி, சென்னை, காசி என பல நகரங்களுக்கு பயணிக்கும் திரைக்கதை. இளையராஜா, வாலி, நசீருதீன் ஷா, கிரீஷ் கர்னாட், ஹேமமாலினி, செளகார் ஜானகி என பல மாபெரும் ஆளுமைகளுடன் திருவும் அந்தப் படத்தில் பங்கேற்றிருந்தார். அவருடைய ஓளிப்பதிவில் 1940-களின் கடைசி ஆண்டுகளை ஆதாரபூர்வமாக உண்மைக்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டன. ’நீ பார்த்த பார்வை’ பாடலில் சூரியன் மறையத் தொடங்கிய முன்மாலைப் பொழுதையும் கொல்கத்தாவில் நெரிசல் மிக்க சாலைகளையும் காசியின் விஸ்தாரத்தையும் சென்னை அக்கிரகாரங்களின் பசுமையையும் கண்முன் திருவின் கேமரா கண்கள் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டின. இந்திய சினிமாவின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக கருதப்படக்கூடிய ’ஹே ராம்’ தொழில்நுட்ப ரீதியில் உலகத் தரத்துடன் இருப்பதற்கு திருவின் ஒளிப்பதிவு மிக முக்கிய பங்காற்றியது.

அடுத்ததாக கமல்ஹாசனின் இன்னொரு பிரம்மாண்ட படைப்பான ‘ஆளவந்தான்’ படத்துக்கும் திரு ஒளிப்பதிவு செய்தார்.

பிரியதர்ஷனுடன் வெற்றிக் கூட்டணி

இந்தி மலையாளப் படங்களிலும் திரு பணியாற்றியிருக்கிறார். தமிழில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு பிரியதர்ஷனின் ‘லேசா லேசா’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதற்கு முன்பு பல படங்கள் ஊட்டியின் குளுமையையும் அழகையும் காட்சிப்படுத்தியிருந்தாலும் ‘லேசா லேசா’ படத்தில் திருவின் கேமரா ஊட்டியின் அழகைப் பன்மடங்காக்கி திரைவழி விருந்து படைத்தது. குறிப்பாக ’அவள் உலக அழகியே’, ‘ஏதோ ஏதோ ஏதோ ஒன்று’ உள்ளிட்ட பாடல்களில் எப்போதும் அசைபோட்டு ரசிக்கக்கூடிய காட்சி அனுபவத்தைச் சாத்தியமாக்கியிருந்தார்.

பிரியதர்ஷன் இயக்கி 2008-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் வென்ற ‘காஞ்சிவரம்’ படத்துக்கும் திரு ஒளிப்பதிவு செய்தார். தற்போது மோகன்லாலை நாயகனாக வைத்து பிரியதர்ஷன் இயக்கிக் கொண்டிருக்கும் ‘மரக்கர்: அரபிக்கடலிண்ட்டே சிம்ஹம்’ என்ற பிரம்மாண்ட வரலாற்றுப் புனைவு திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கிறார் பிரியதர்ஷன்.

தேசிய விருது

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்து 2016-ல் வெளியான ‘24’ படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றார் திரு. காலப் பயணத்தை (Time Travel) மையமாகக் கொண்ட அந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தியிருந்தது. திருவின் ஒளிப்பதிவு அந்த பாய்ச்சல்களின் மைய அச்சாக விளங்கியது.

ரஜினியுடன் ஒரு படம்

இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி’, ‘பேட்ட’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் திரு. ‘பேட்ட’ படத்தின் மூலம் கமலின் தொழில் போட்டியாளரும் மிகப் பெரிய சாதனையாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றிவிட்டார்.

இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான திரு இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த அவருடைய பிறந்தநாளான இன்று மனதார வாழ்த்துவோம்.


தவறவிடாதீர்!

ஒளிப்பதிவாளர் திருதிரு பிறந்த நாள்திரு பிறந்த நாள் ஸ்பெஷல்திரு பிறந்த நாள் கட்டுரைஹே ராம்பேட்டகமல்ரஜினிஆளவந்தான்மகளிர் மட்டும்ஒளிக்கலைஞன்லேசா லேசாமெர்க்குரி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x