

புகழ்ச்சியை விரும்பாதவன் உலகத்திலேயே யாருமே கிடையாது என்று இணையதள தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
பாலா இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'தாரை தப்பட்டை' இளையராஜா இசையில் வெளிவர இருக்கும் 1000வது படமாகும். தன் அனுமதியில்லாமல் பாடல்கள் பயன்படுத்துவதை தடுப்பது, உரிய உரிமை தொகை பெறுவது என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் இளையராஜா.
இளையராஜா பெயரில் பல்வேறு இணையதளங்கள் மற்றும் யு-டியூப் சேனல்கள் செயல்படுத்தி வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் இளையராஜா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ இணையதளம் (www.ilaiyaraajalive.com ) மற்றும் யு-டியூப் சேனல் (https://www.youtube.com/user/Ilaiyaraajaofficial) ஆகியவற்றை தொடங்கி இருக்கிறார்கள்.
இணையதளம் மற்றும் யு-டியூப் சேனல் தொடக்க விழாவில் இளையராஜா பேசியது, "இதுவரைக்கும் இணைய தளங்களில் என்னுடைய பெயரில் பல்வேறு இணைய பக்கங்கள் தொடங்கப்பட்டு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் என் கவனத்திற்கு வராமல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்பட்டு வருகின்றன என்பதோடு, இந்த பக்கங்கள் மூலம் என்னுடைய ரசிகர்களை தவறாக திசை திருப்பும் வேலையிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் நோக்கத்துடன் ஒரு இணைய பக்கத்தை www.ilaiyaraajalive.com பெயரில் இன்றிலிருந்து தொடங்கி இருக்கிறேன். இதேபோல், யூடியூப் சேனல் www.youtube.com/ilaiyaraajaofficial வழியாக என்னுடைய அரிய வீடியோ இணைப்புகளை நீங்கள் காணலாம். இனிமேல் என் அதிகாரப்பூர்வமான சேனல்கள் இவைதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
1000வது படம் குறித்த போட்டிகள் உள்ளிட்டவைப் பற்றி எல்லாம் இயக்குநர் பாலா தான் சொல்ல வேண்டும். இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. சமூகவலைத்தளத்துக்கு எல்லாம் எனக்கு நேரமில்லை. என்னுடைய பணி ஒன்றே ஒன்று தான். எனக்கு அதில் ஆர்வம் கிடையாது. இணையதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை வைத்து எனது மலரும் நினைவுகள் வரும்.
புகழ்ச்சியை விரும்பாதவன் உலகத்திலேயே கிடையாது. எப்படி புகழை விரும்பாமல் இத்துறைக்கு நான் வந்திருக்க முடியும். என்னை பார்க்க வரும் ரசிகர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள், "உங்க பாட்டு தான் எனக்கு உயிர்" என்று கூறி காலில் விழுந்து அழுகிறார்கள். இதை ஒரு நாள் கேட்கலாம், 2வது நாள் கேட்கலாம். ஆனால், தினமும் வந்து சொல்கிறார்கள். அறிய பொருட்கள் கண்டு கொள்ள இறைவன் அறிவைக் கொடுத்தும், நாம் அறிய மனிதர்களை கண்டு கொள்ளவில்லை என்றால் அறிவு இருந்து எந்த பயனும் கிடையாது.மறைந்த அப்துல் கலாம் மாணவர்களுக்கு எவ்வளவு எழுச்சியுட்டினார், அதை நான் இசையில் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான்.
என் பெயரை நிறைய பேர் சொந்தமாக உபயோகப்படுத்த தொடங்கி விட்டார்கள். அதனால் தான் இந்த முடிவு. இனிமேல் நான் அடைய ஒன்றுமில்லை. " என்று தெரிவித்தார்.