பாத்ரூம் பாடகர்களுக்கு ஒரு வாய்ப்பு; கரோனா நிதிக்காக பாடல் போட்டி - ஆண்ட்ரியா அறிவிப்பு

பாத்ரூம் பாடகர்களுக்கு ஒரு வாய்ப்பு; கரோனா நிதிக்காக பாடல் போட்டி - ஆண்ட்ரியா அறிவிப்பு
Updated on
1 min read

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தினக்கூலிப் பணியாளர்களும், அடித்தட்டு மக்களும் கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றனர். பாடகர்களும் சமூக வலைதளங்களில் பாடல்களைப் பாடி அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடன இயக்குநர் ஜெஃப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது:

''அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.

நானும் ஜெஃப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்.

இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்''.

இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக ஆண்ட்ரியா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in