

வீட்டில் வரன் பார்த்து வருகிறார்கள் என்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் 'சரவணன் மீனாட்சி (சீசன் 2)' சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2018-ம் ஆண்டு முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இதில் நடித்த அனைவருக்குமே தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
இந்தக் கரோனா ஊரடங்கில் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ வடிவில் பதிலளித்தார். அதில் சில கேள்வி பதில்கள் இதோ:
மக்கள் தொலைக்காட்சியில் மீண்டும் சித்ராவைக் காண முடியுமா?
அதற்கு சேனல் ஆசைப்படணுமே. சேனல் ஆசைப்பட்டால் கண்டிப்பாக பார்க்க முடியும்.
உங்களுக்குத் திருமணம் எப்போது?
2 ஆண்டுகளாகும். வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா?
இந்த மூஞ்சிக்கெல்லாம் யார்மா கிடைப்பா.
பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய எபிசோட்ஸ் எப்போது ஒளிபரப்பாகும்?
அதற்காகத்தான் நாங்களும் காத்துட்டு இருக்கோம். படப்பிடிப்பு நடந்தால் கண்டிப்பாக புதிய எபிசோட்ஸ் வரும். உங்களைப் போலவே நானும் ஆவலோடு காத்துட்டு இருக்கேன்.