

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆர்டிகிள் 15' திரைப்படம் தமிழில் ரீமேக்காவது உறுதியாகியுள்ளது.
அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழில் யாரை வைத்து ரீமேக் பண்ணலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சில நாட்களுக்கு முன்பு, 'ஆர்டிகிள் 15' ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளீர்களாமே? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக அருண்ராஜா காமராஜ் கூறுகையில், "இது தொடர்பான அறிவிப்பு எல்லாம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்துதான் வரவேண்டும்" என்றார்.