

'மாஸ்டர்' படத்தில் வழக்கமான விஜய் அண்ணாவை காணமுடியாது என்று சாந்தனு தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏற்கெனவே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட திரைப்படங்களின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், தற்போது 'மாஸ்டர்' பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து படத்தை தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தில் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாந்தனு. தற்போது கரோனா ஊரடங்கில் நேரலை பேட்டியொன்றில் 'மாஸ்டர்' படத்தின் அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். அதில் சாந்தனு கூறியிருப்பதாவது:
"இந்தப் படத்தில் மெய் சிலிர்க்கவைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. வழக்கமான விஜய் அண்ணாவை திரையில் காண மாட்டோம். அவரே தன்னைத் தானே இந்தப் படத்தில் நிறைய மாற்றியிருப்பதை படப்பிடிப்பில் பார்த்தேன். விஜய் அண்ணா இப்படித்தான் நடிப்பார் என்று நினைத்துப் போனேன். ஆனால், அந்தக் காட்சியில் அதே மாதிரி அவர் நடிக்கவில்லை.
விஜய் அண்ணா படமாக இருக்க வேண்டும். ஆனால், வழக்கமான விஜய் அண்ணா படமாக இருக்கக் கூடாது என்பதில் லோகேஷ் கனகராஜ் தெளிவாக இருந்தார். அப்படியிருந்தால் தான் மக்களிடையே போய் ரீச்சாகும் என நினைத்தார்.
முதன்முதலில் டெல்லி படப்பிடிப்புக்குச் செல்லும் போது 'வாத்தி கம்மிங்' பாடல் படப்பிடிப்பு தான் நடந்து கொண்டிருந்தது. ஒரு முறை விஜய் அண்ணா நடனமாடி முடித்தவுடன், ஒட்டுமொத்த 'மாஸ்டர்' குழுவே கைதட்டி விசிலடித்தோம். ஏனென்றால் அதில் அவர் காட்டிய நடன அசைவுகள், அணுகுமுறை எல்லாமே அப்படியிருந்தது. கண்டிப்பாக அந்தப் பாடல் காட்சிகளாக நன்றாக இருக்கும்"
இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.