

'காக்க காக்க 2' உருவானால் நடிப்பீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஜோதிகா
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'காக்க காக்க'. 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சூர்யாவின் திரையுலக வாழ்க்கையை மாற்றியமைத்த படம் என்று பலரும் கூறுவார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பு, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு மற்றும் ஆண்டனியின் எடிட்டிங் என அனைத்து தரப்பிலுமே இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் எழும். ஆனால் கெளதம் மேனன் இது தொடர்பாக எந்தவொரு பதிலுமே தெரிவித்தது இல்லை. இதனிடையே, 'பொன்மகள் வந்தாள்' படத்தை விளம்பரப்படுத்த அமேசான் ப்ரைம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் ஜோதிகா.
அப்போது ஒருவர் "’காக்க காக்க 2’ உருவானால் நடிப்பீர்களா" என்ற கேள்விக்கு ஜோதிகா "'காக்க காக்க 2' கண்டிப்பாக பண்ணுவோம். கெளதம் மேனன் அதற்கான கதையுடன் வந்தால் தயாராகவே இருக்கிறோம்" என்று பதிலளித்துள்ளார்.
மேலும் 'நாச்சியார் 2' குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், "பாலா சார்கிட்ட 'நாச்சியார் 2' கதையை எழுதச் சொல்றேன்" என்று தெரிவித்துள்ளார்.