

இஸ்லாம் மதத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு யுவன் பதிலளித்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினார் ஷாஃப்ரூன் நிஷா. அப்போது பலரும் யுவனின் மதம் மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்குத் தகுந்த பதில் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து யுவனிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள், அதற்கு அவரே பதிலளிப்பார் என்று ஷாஃப்ரூன் நிஷா அறிவித்தார். அதில் யுவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
கேள்வி: இஸ்லாம் மதத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?
யுவன்: இந்த கேள்வியைக் கேட்டதுமே என் மனதில் தோன்றிய முதல் விஷயம் யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் இல்லை என்பதுதான். நாம் தொழுகைக்கு செல்லும்போது நம் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அப்போது இவர்தான் முதலில் நிற்க வேண்டும் என்று யாருக்கும் முன்னுரிமை கிடையாது. இதுதான் என்னை முதலில் ஈர்த்த விஷயம்.
கேள்வி: குர்ஆனில் என்ன மாதிரியான விடைகள் உங்களுக்கு கிடைத்தது?
யுவன்: பொதுவாக நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கும்போது என்ன மாதிரியான கேள்விகள் வருமோ அவை எனக்கும் வந்தன. நாம் இறந்தபிறகு நம் ஆன்மா எங்கு செல்கிறது? நம்மை சுற்றி ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகள் ஏன் உள்ளது? இது போன்ற பலவகையான கேள்விகள் நமக்குள் வரும்? அந்த சமயத்தில் நான் குர்ஆனை எடுத்து படிக்கும்போது அதற்கான விடைகள் எனக்கு நேரடியாக கிடைத்தது போல இருந்தது. அதே வீட்டுக்கு ஒரு தலைவன், நாட்டுக்கு ஒரு தலைவன் இருப்பது போல உலகத்துக்கு ஒரு தலைவன் என்னும் விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.