

கரோனா அச்சுறுத்தலால் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு இனி எப்படி நடக்கும் என்ற கேள்விக்கு மணிரத்னம் பதிலளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. பல முன்னணி இயக்குநர்களால் திட்டமிடப்பட்டுக் கைவிடப்பட்ட இந்தப் படத்தை தற்போது மணிரத்னம் இயக்கி வருகிறார்.
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, ஜெயராம், ரியாஸ்கான் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்து வருகிறது. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சுமார் 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதர காட்சிகள் திட்டமிடப்பட்டபோது இந்தக் கரோனா அச்சுறுத்தலால் அனைத்துமே நின்றுவிட்டது. அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதே இன்னும் தெரியாமல் உள்ளது.
இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகம் எப்படிப் பயணிக்கும் என்பதை தென்னிந்திய சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் (SICCI) வெப்பினார் (Webinar) கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. இதில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு திரையுலகம் இனிமேல் எப்படிப் பயணிக்க வாய்ப்புள்ளது தொடர்பாக தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதில் பலரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நிறைய நடிகர்கள், போர்க் காட்சிகள் இருப்பதால் இனிமேல் எப்படி படப்பிடிப்பு என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக மணிரத்னம் கூறியதாவது:
" 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு இப்போது தடைப்பட்டுள்ளது. படத்துக்காக பிரம்மாண்ட போர்க் காட்சிகள், நிறைய கூட்டம் இருக்கும் காட்சிகள் என படம்பிடிக்க வேண்டும். அதை எப்படிப் படம்பிடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் எப்படியோ அதைச் செய்து முடிப்பேன். மேலும் நான் ஒரு தொழில்முறைக் கலைஞன். இதற்காகத்தான் சம்பளம் பெறுகிறேன். அதைப் படம்பிடித்து முடித்து அது எப்படிச் செய்ய முடியும் என்று காட்டுகிறேன்".
இவ்வாறு இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.