

திரைக்கதை இல்லாமல் 'விசாரணை' மற்றும் 'அசுரன்' படத்தை உருவாக்கியதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அசுரன்'. தனுஷ், பசுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தாணு தயாரிப்பில் இப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமைக்குக் கடும் போட்டி நிலவியது. இப்போதைக்கு தெலுங்கு ரீமேக் மட்டுமே தயாராகி வருகிறது. மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட படம் 'விசாரணை'.
இந்தக் கரோனா ஊரடங்கில் பாசு ஷங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து நேரலைக் கலந்துரையாடலில் ஈடுபட்டார் வெற்றிமாறன். அதில் 'விசாரணை' மற்றும் 'அசுரன்' ஆகிய படங்கள் திரைக்கதை அமைப்பு இல்லாமல் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதி:
தினேஷ் கார்த்திக்: ஹாலிவுட்டில் முழு திரைக்கதை முடித்தால்தான் படம் எடுக்க முடியும். ஆனால் இங்கு ஒரு இயக்குநரை நம்பித்தான் படம் எடுக்கப்படுகிறது. அப்படியென்றால் தயாரிப்பு நிறுவனம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டும் இல்லையா?
வெற்றிமாறன்: அப்படிச் சொல்ல முடியாது. எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. எனக்குத் தெரிந்து 99% இயக்குநர்கள் எழுதி முடித்துவிட்டுத்தான் படப்பிடிப்புக்குச் செல்கின்றனர். ஆனால், சில, பொறுப்பில்லாத, மோசமான, அப்போதைக்கு அப்போது வரும் யோசனையை நம்பும் இயக்குநர்கள் படப்பிடிப்புக்கு திரைக்கதை எழுதாமல் செல்கின்றனர். நான் அப்படித்தான் செல்கிறேன். அதற்கு இப்படி என்னை நானே விமர்சித்துக் கொள்கிறேன். அதை மாற்ற வேண்டும் என்று முயன்று வருகிறேன்.
'விசாரணை', 'அசுரன்' படங்கள் எடுக்கும்போது என் கையில் திரைக்கதை என்று எதுவும் இல்லை. இரண்டுமே நாவல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டவை. அந்தக் கதைகளில் இருக்கும் உணர்ச்சிகள், தன்மைகள் அப்படியே இருந்தன. அதை வைத்து எப்படி எடுப்பது என்று யோசித்து எடுத்தோம். சில காட்சிகளை என்னால் எழுத முடியாது. 'வடசென்னை' படத்தில் ராஜன் கொல்லப்படும் காட்சியாக இருக்கட்டும், விசாரணை படத்தில் கையில் கிடைத்திருப்பவர்களை வைத்து என்ன செய்வது என்று போலீஸ் யோசிக்கும் காட்சியாக இருக்கட்டும் இந்தக் காட்சிகளை என்னால் எழுத முடியாது. ஏனென்றால் அவை மிகத் தீவிரமான காட்சிகள். அதை எழுதும்போதே குற்ற உணர்வு ஏற்படும். எனவே என்னால் அதை எழுத முடியாது.
படப்பிடிப்புக்குச் சென்று, அங்கிருக்கும் நடிகர்களின் யோசனையையும் பெற்று, கலந்தாலோசித்து, அதிலிருந்து சிறந்ததை எடுப்பேன். நான் மட்டும் குற்ற உணர்வோடு இருக்க வேண்டுமா, எல்லோரும் பகிர்ந்து கொண்டு எடுத்து முடிப்போம் என்றுதான் படப்பிடிப்பிலும் கூறுவேன். அப்படி சில விஷயங்களை நான் வேண்டுமென்றே எழுத மாட்டேன். சில நேரங்களில் படப்பிடிப்பில் அந்தத் தருணத்தில் வரும் யோசனைகள் உதவும். நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன் ஆடுவதைப் போல. உள்ளுணர்வை நம்பிக் களமிறங்குவதுதான்.
இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்தார்.