நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்: மணிரத்னம்

நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்: மணிரத்னம்
Updated on
1 min read

நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகம் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது. சுமார் 50 நாட்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. மேலும், சின்னத்திரை படப்பிடிப்புக்கு 60 பேருடன் நடத்தவும் அனுமதியளித்துள்ளது. இதனால் விரைவில் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகம் எப்படி பயணிக்கும் என்பதை தென்னிந்திய சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் (SICCI) வெப்பினார் (Webinar)கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. இதில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு திரையுலகம் இனிமேல் எப்படி பயணிக்க வாய்ப்புள்ளது தொடர்பாக தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, "திரைப்பட விநியோகம் மற்றும் திரையிடல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனி தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க வேண்டும். துறை தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். மீண்டும் நாம் எழுந்து நிற்க அரசின் உதவியும் நமக்குத் தேவைப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், ஓடிடி தளங்களின் வளர்ச்சி தொடர்பாக மணிரத்னம், "டிஜிட்டல் தளத்தில் வரும் படைப்புகளின் தன்மை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்துக்கு ஈடே கிடையாது. ஆனால் திரையரங்குக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. டிஜிட்டல் தளங்களும் ஒரு மார்க்கம்தான். அது நன்றாகத்தான் இருக்கிறது" என்று மணிரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in