ஆண் குழந்தைக்கு அப்பாவானார் இயக்குநர் விஜய்

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் இயக்குநர் விஜய்
Updated on
1 min read

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அஜித், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். தயாரிப்பாளர், நடிகர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இவர். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

‘தெய்வத் திருமகள்’ படத்துக்காக தமிழக அரசின் இரண்டு விருதுகள் கிடைத்தன. இந்தப் படத்தில் நடிக்கும்போது, இவருக்கும், அமலாபாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஒருவழியாக, 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தார் விஜய். அந்த வருடம் ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது.

ஆனால், இந்தத் திருமண உறவு இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து, 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பொதுநல மருத்துவரான ஐஸ்வர்யா என்பவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் விஜய் திருமணம் செய்தார்

இந்நிலையில் விஜய் - ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இன்று (30.05.20) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in