

'மாஸ்டர்' ட்ரெய்லர் எப்படி இருந்தது என்று மாளவிகா மோகனன் பதில் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது 'மாஸ்டர்' பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
'மாஸ்டர்' படத்தின் புகைப்படங்கள் மற்றும் இசை ஆகியவற்றை மட்டுமே வெளியிட்டுள்ளது படக்குழு. டீஸர் மற்றும் ட்ரெய்லர் குறித்து எந்தவொரு அறிவிப்புமே வெளியாகாமல் உள்ளது. படம் தீபாவளிக்கு தான் வெளியீடு என்பதால் ட்ரெய்லர் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு.
மேலும், இந்தப் படத்துக்காக ட்ரெய்லரை தயார் செய்து வைத்துள்ளது படக்குழு. அதை படக்குழுவினர் அனைவருக்கும் காட்டியுள்ளனர். 'மாஸ்டர்' ட்ரெய்லர் குறித்து அர்ஜுன் தாஸ் ட்விட்டர் நேரலையில் பேசும் போது குறிப்பிட்டு இருந்தார். தற்போது 'மாஸ்டர்' ட்ரெய்லர் குறித்து நாயகி மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:
"இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னையில் இருந்தபோது நான் 'மாஸ்டர்' படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். அதன் பிறகு மறுநாள் அலுவலகத்துக்கு சென்று மீண்டும் ட்ரெய்லரை பார்த்தேன். அது ஒரு வெறித்தனமான ட்ரெய்லர். நிச்சயம் உங்களை ட்ரெய்லரை பார்க்கும்போது சிலிர்ப்பு ஏற்படும். மிகவும் நன்றாக இருந்தது. ட்ரெய்லர் எப்போதும் வெளிவரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்"
இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.