

நமது ஊரின் சூப்பர் ஹீரோ வடிவம் தான் சூப்பர்ஸ்டார்களின் மாஸ் படங்கள் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்
கரோனா ஊரடங்கில் அனைவருமே நேரலையில் பேட்டி மற்றும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு தனியார் யூடியூப் இணையதளம் ஒன்று ஒருங்கிணைத்த கலந்துரையாடலில் பயிற்சியாளர் பாசு ஷங்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினேஷ் கார்த்திக் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே உடற்பயிற்சியாளராக பாசு ஷங்கர் இருந்து வருகிறார். இந்த கலந்துரையாடலில் கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படங்கள் குறித்த நிலை குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதி:
தினேஷ்: அப்படியென்றால் மாஸ் ஹீரோ, அறிமுகப் பாடல் போன்ற விஷயங்களையெல்லாம் தொடர்வது கடினமாகிவிடும் இல்லையா?
வெற்றிமாறன்: அது இன்னும் அதிகமாகும் என்று தான் நினைக்கிறேன். ஹாலிவுட்டில் இப்போது பெரும்பாலும் சூப்பர்ஹீரோ படங்களை, குறிப்பிட்ட படங்களின் வரிசைகளைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' என்று சொன்னால் ஏற்கனவே அதற்கு முன்பு இருக்கும் 8 படங்கள் அவர்களுக்கான விளம்பரம் தான். எனவே இந்தப் பெயரே ஒரு விளம்பரமாகிவிடும். எனவே விளம்பரத்துக்காக அவர்கள் செலவிடும் தொகை குறைவாக இருக்கும்.
சூப்பர் ஹீரோ படங்களைப் பொருத்தவரை, அது மாயாஜாலம், கற்பனை உலகுக்கு இடம் தருகிறது. இந்தியாவில் சூப்பர் ஹீரோவாக எடுக்க முடியாத படத்தை நமது சூப்பர்ஸ்டார்ஸை வைத்து எடுப்போம். அப்படியான படங்களில் தான் அறிமுகப் பாடல்கள், 50-100 பேரை அடிக்கும் மாஸ் சண்டைக் காட்சிகள் இருக்கும். நமது ஊரின் சூப்பர் ஹீரோ வடிவம் தான் சூப்பர்ஸ்டார்களின் மாஸ் படங்கள். அது இருக்கும்.