குறும்படத்துக்காக 'விடிவி 2' காட்சியைத் தேர்வு செய்தது ஏன்? - கெளதம் மேனன் விளக்கம்

குறும்படத்துக்காக 'விடிவி 2' காட்சியைத் தேர்வு செய்தது ஏன்? - கெளதம் மேனன் விளக்கம்
Updated on
1 min read

'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்திலிருந்து ஒரு காட்சியை குறும்படமாக இயக்கியதற்கான காரணத்தை கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கில் தான் எழுதி வைத்திருந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' 2-ம் பாகத்திலிருந்து ஒரே ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். அதில் சிம்பு - த்ரிஷா இருவரும் வீட்டிலிருந்தபடியே நடித்துக் கொடுத்துள்ளனர்.

'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தப் படம் ஆதரவையும், விவாதத்தையும் ஒருசேரப் பெற்றுள்ளது. இந்தத் தருணத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' கதையிலிருந்து ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக எடுக்க நினைத்தது ஏன் என்பது குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பதாவது;

"இந்த ஊரடங்கின்போது சில நாட்கள் மிகவும் வெறுமையாக இருந்தன. என்ன நடக்கப் போகிறது என்ற சிந்தனை இருந்தது. திரையரங்குகள் திறக்கப்படுமா என்று கேள்விகள் எழுந்தன. அதே நேரத்தில் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் தரப்பிலிருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்தன. இது அத்தனையும் இந்தக் குறும்படத்தில் வைத்தேன். அப்படியே இரண்டு கதாபாத்திரங்கள் பேசுவது போல பல வடிவங்கள் எழுதினேன்.

’என்னை அறிந்தால்’ படத்தின் சத்யதேவும், விக்டரும் பேசுவது போல் ஒன்று எழுதினேன். 'காக்க காக்க' அன்புச்செல்வனும், இன்னொருவரும் பேசுவது போல, இருவர் எதிரெதிரே உட்கார்ந்து போலீஸ் விசாரணை போல, இப்படி பல உரையாடல்களை எழுதினேன். வீட்டுக்குள்ளேயே இருந்து எடுக்கும் அளவுக்கான யோசனைகள் அவை.

ஆனால், என்னால் இதில் எதிலும் நடிக்க முடியாது இல்லையா. சூர்யா, அஜித் என யாரையாவது கேட்க வேண்டும். அது எளிது கிடையாது. அவர்கள் எதற்கு என்று யோசிக்கலாம். ஆனால், நான் ஏதாவது கேட்டால் யோசிக்காமல் முன் வருபவர்கள் த்ரிஷாவும், சிம்புவும். எனவே அவர்களிடம் கேட்டேன். சொன்னதுமே அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். நான் படம் பிடித்து, எடிட் செய்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பினேன். அவர் உடனே அதைப் பார்த்து, நல்ல யோசனை, செய்வோம் என்று பதில் போட்டார். இந்த மூவர்தான் முக்கியமானவர்கள்.

இன்னொரு பக்கம் மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நான் எழுதியவற்றில் இதுதான் எனக்குப் பிடித்திருந்தது. 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படம் பார்க்கும்போது, ஓ இதுதான் அந்தக் காட்சியா என்ற ஆச்சரியம் ரசிகர்களுக்கு வர வேண்டும் என்றும் நினைத்தேன்".

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in