'மாஸ்டர்' ஒளிப்பதிவாளருக்கு உயரிய அங்கீகாரம்

'மாஸ்டர்' ஒளிப்பதிவாளருக்கு உயரிய அங்கீகாரம்
Updated on
1 min read

'மாஸ்டர்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனுக்கு இந்திய ஒளிப்பதிவாளர் சமூகத்தின் உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1995-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே இந்திய ஒளிப்பதிவாளர்கள் சமூகம். சுருக்கமாக ISC (The Indian Society of Cinematographers) இது ஒளிப்பதிவாளர்களுக்கான சங்கம் போலச் செயல்படாது. இதன் உறுப்பினராக வேண்டுமென்றால் ஏற்கெனவே இதில் இருக்கும் ஒருவர் அழைப்பு விடுத்தால் மட்டுமே முடியும்.

மேலும் ஒளிப்பதிவு, புகைப்படத்துறையில் சிறந்து விளங்குபவர்களைத் தானாக முன் வந்து அங்கீகரிக்கும் ஒரு சமூகம் இது. திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இச்சமூகம் செயல்படுகிறது. இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் ஒளிப்பதிவாளர்கள், தங்கள் பெயருடன் ISC என்று சேர்த்துக் கொள்ளலாம். இது இந்தியாவில் உயரிய கவுரமாகக் கருதப்படுகிறது.

கே.வி.ஆனந்த், ராஜீவ் மேனன், ரவி.கே.சந்திரன் உள்ளிட்ட ஒளிப்பதிவாளர்கள் இதில் உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர். தற்போது இந்த அமைப்பு ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனை அங்கீகரித்துள்ளது. 'மாயா', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவுக்காக பல தரப்பிலிருந்து பாராட்டைப் பெற்றவர் சத்யன் சூர்யன்.

இந்த அங்கீகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னை ISC-ல் ஒருவனாக சேர்த்துக்கொண்ட இந்திய ஒளிப்பதிவாளர்கள் சமூகத்துக்கு நன்றி. துறையில் உயர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த மதிப்புமிக்க அமைப்பில் ஒரு அங்கமாக இருப்பது பெரிய கவுரவம். சன்னி ஜோசப், அனில் மேதா, ரவிகே சந்திரன் ஆகியோருக்கு நன்றி" என்று சத்யன் சூர்யன் பகிர்ந்துள்ளார்.

தமிழ்த் திரையுலகினர் பலரும் சத்யன் சூர்யனுக்கு தங்களது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in