

விஜய்யுடனான வரலாற்றுப் படத்தின் நிலை குறித்து நேரலை கலந்துரையாடல் ஒன்றில் பேசியுள்ளார் சசிகுமார்.
சசிகுமார் நாயகனாக நடிப்பில் 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'ராஜவம்சம்', 'நா நா', 'பரமகுரு' மற்றும் 'எம்.ஜி.ஆர் மகன்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் 'முந்தானை முடிச்சு' ரீமேக்கில் கவனம் செலுத்தவுள்ளார்.
கரோனா ஊரடங்கில் ஆடை வடிவமைப்பாளரான சத்யா உடன் நேரலைக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார் சசிகுமார். ஏனென்றால், சசிகுமாரிடம் நீண்ட நாட்களாக ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தவர் சத்யா என்பது நினைவுகூரத்தக்கது. இந்த நேரலைக் கலந்துரையாடலில் விஜய்யை வைத்து இயக்கவிருந்த வரலாற்றுப் படம் குறித்துப் பேசியுள்ளார் சசிகுமார்.
அந்தப் பகுதி;
சத்யா: வரலாற்றுக் கதையில் நடித்து அதன் உடைகள் போடணும் என்ற ஆசை இருக்கிறதா?
சசிகுமார்: எனக்கு ஆசையில்லை. ஆனால், ஒரு வரலாற்றுக் கதை பண்ண வேண்டும் என ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறேன்.
சத்யா: உங்கள் அனுமதியுடன் சொல்கிறேன். நீங்கள் அந்தக் கதையை விஜய்க்காக எழுதியிருந்தீர்கள் என்று ஓரளவுக்குத் தெரியும். 'தெறி' படத்துக்காக நானும் விஜய் சாரும் கோவாவுக்குச் சென்றோம். அப்போது, "சசிகுமார் சாருடன் ஒரு படம் பண்றீங்களாமே" என்று கேட்டேன். "ஆமாம் நண்பா.. பேசிட்டு இருக்கோம். பார்ப்போம்" என்றார். நான் விஜய் சாருடன் பணிபுரிந்துவிட்டேன். இதுவரைக்கும் பார்க்காத விஜய் சாரை ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தீர்கள். யாருமே விஜய் சாரை அப்படியொரு உடையில் பார்த்திருக்கவே முடியாது. அதைப் பார்த்தபோது உள்ள பிரமிப்பு இன்னும் இருக்கிறது. அது சாத்தியமாகுமா?
சசிகுமார்: ஆகலாம். ஆகாது என்று சொல்ல முடியாது. ஒரு கதை பேசி பண்ணலாம் என்று திட்டமிட்டோம். வேறு சில காரணங்களுக்காக அது நடைபெறவில்லை. பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் அதிகமாக இருந்தது. கதையைக் கேட்டு அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. வரும் காலத்தில் கண்டிப்பாகப் பண்ணுவோம்.
இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார்.