

சிம்பு சொன்னது போலவே மீம்ஸ்கள் வெளியாயின என்று இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பாடல்கள், கதையமைப்பு, வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்தப் படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையைத் தயாராக வைத்துள்ளார் கெளதம் மேனன். இந்தக் கரோனா ஊரடங்கில் அந்தப் படத்தின் ஒரு காட்சியை மட்டும் எடுத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். 12 நிமிடங்கள் கொண்ட இந்தக் குறும்படத்தில் சிம்பு - த்ரிஷா இருவரும் நடித்திருந்தனர். தொலைபேசி வாயிலாக நிகழும் உரையாடலாக இந்தக் குறும்படம் அமைந்திருந்தது.
'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்பட உரையாடலில் "நீ எனக்கு 3-வது குழந்தை" என்று ஜெஸி கதாபாத்திரம் கார்த்திக்கிடம் கூறுவது போல இடம்பெற்றிருக்கும். இதை வைத்து பலரும் மீம்ஸ் போடத் தொடங்கினர். மேலும், இந்தக் குறும்படம் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இந்த மீம்ஸ் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:
"இந்தக் குறும்படம், அதன் உரையாடல் பற்றி சிம்புவிடம் சொன்னபோது, அவர் ''கண்டிப்பாக இந்தப் படம் பற்றிப் பேசுவார்கள், விவாதிப்பார்கள். த்ரிஷா நீ என் மூன்றாவது குழந்தை போல என்று சொன்னதால், நான் த்ரிஷாவின் மடியில் குழந்தையாக உட்கார்ந்திருப்பது போல மீம் போடுவார்கள்'' என்றார். அப்படியே நடந்தது. நான் அதைப் பார்த்து சிம்புவை அழைத்து 'தலைவா நீங்க சொன்ன மாதிரியா வந்திருக்கு' என்றேன். நாங்கள் இருவரும் சிரித்தோம்.
ஆனால், உண்மையில் அப்படி ஜெஸி கதாபாத்திரம் சொல்வது அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை. அப்படிச் சொல்லி கார்த்திக்கை ஒரு குறிப்பிட்ட எல்லையில் வைக்க முடியும் என்பது அவளுக்குத் தெரியும். அவள் அதைச் சொல்லும்போது உணர்வுபூர்வமாகத்தான் சொல்கிறாள். நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று ஒரு முன்னாள் காதலி சொன்னால்தான் வலி இன்னும் அதிகம். உன்னை என் குழந்தையாகப் பார்க்கிறேன் எனும்போது அது இன்னும் அழகான இடம் என்று நினைக்கிறேன். நீ என்னுள் இருப்பவன் என்று சொல்வதைப் போல. இந்த உரையாடல் என் கதை அல்ல, என் வாழ்வில் நடந்ததல்ல. ஆனால் இப்படி ஒரு பெண் பேசியிருப்பது எனக்குத் தெரியும். அதைத்தான் படத்தில் வைத்தேன்".
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.