

கரோனா ஊரடங்கில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் கதை, திரைக்கதையை எழுதி முடித்துள்ளார் விஜய் ஆண்டனி.
2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமனுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.
இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு முன்னணி நாயகன் அந்தஸ்து கிடைத்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூட விஜய் ஆண்டனி நடித்த படங்களில் அதிகமான டி.ஆர்.பி கிடைத்தது 'பிச்சைக்காரன்' படத்துக்குத் தான்.
தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தின் உருவாக்கத்தில் தீவிரமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தக் கரோனா ஊரடங்கில் விஜய் ஆண்டனி இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சசி வெவ்வேறு படங்களை இயக்கவுள்ளதால், அவர் இயக்கவில்லை.
விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளாரா அல்லது யார் இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், முதல் பாகத்தை விடக் கொஞ்சம் பிரம்மாண்டமாக உருவாக்க விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் படக்குழுவினரை அறிவிக்கத் திட்டமிட்டு வருகிறார்.
இசையமைப்பாளர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது கதாசிரியராகவும் விஜய் ஆண்டனி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.