

டிஜிட்டல் இசை கோர்வைக்கு பயன்படும் லாஜிக் ப்ரோ எக்ஸ் என்ற மென்பொருளின் லேட்டஸ்ட் அப்டேட் சமீபத்தில் வெளியானது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு ‘லாஜிக் ப்ரோ எக்ஸ் பயனாளர்களே.. 10.5 பதிப்பை பதிவிறக்கம் செய்துவிட்டீர்களா? அது எப்படி இருக்கிறது?’ என்று ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் அந்த மென்பொருள் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். லாஜிக் ப்ரோ எக்ஸ் மென்பொருள் குறித்த சந்தேகங்களை கேட்ட சிலருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் சில குறும்புக்கார ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கிண்டல் தொனியில் கேள்விகள் கேட்க அதற்கு அவரும் சளைக்காமல் அவர்கள் பாணியிலேயே பதிலளித்துள்ளார்.
ரசிகர் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ‘இந்த மென்பொருளை பயன்படுத்த ஒரு ஆப்பிள் மேக்புக்கை நீங்கள் எனக்கு பரிசாக கொடுத்தால் நான் அப்டேட் செய்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ‘அதை நீங்கள் உழைத்து வரும் பணத்தில் வாங்கினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று பதிலளித்தார்,
அதே போல இன்னொரு ரசிகர் ‘செயற்கை நுண்ணறிவு குறித்து ஏதாவது தெரியுமா?’ என்று நக்கல் தொனியில் கேட்க, அதற்கு ஏ.ஆர். ரஹ்மான் ‘எம்ஐடியில் 2018ஆம் ஆண்டு ஒரு சிறிய கோர்ஸ் படித்தேன்’ என்று பதிலளித்துள்ளார்.
ரசிகர்களின் குறும்புத்தனமான கேள்விகளுக்கு கோபப்படாமல் அவர்கள் பாணியிலேயே ஏ.ஆர்.ரஹ்மான கூறிய பதில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.