

முதலில் 'மின்னலே' கதை மீது பலருக்கும் நம்பிக்கை இல்லை என்று மாதவன் தெரிவித்துள்ளார்.
2001-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் 'மின்னலே'. இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக கெளதம் மேனன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். 'அலைபாயுதே' படத்தின் வெற்றிக்குப் பிறகு மாதவன் நாயகனாக நடித்த படம்.
அப்பாஸ், ரீமா சென், விவேக், நாகேஷ், கிட்டி உள்ளிட்ட பலர் மாதவனுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் பாடல்கள் தொடங்கி அனைத்துமே மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப்படத்துக்காகப் பட்ட கஷ்டங்கள் குறித்து அஸ்வினுடன் நடந்த நேரலைக் கலந்துரையாடலில் பேசியுள்ளார் மாதவன்.
அதில் மாதவன் கூறியிருப்பதாவது:
" 'அலைபாயுதே' வெளியீட்டுக்கு முன்பே கதையைக் கேட்டேன். ரொம்பவே பிடித்திருந்தது. பல்வேறு தயாரிப்பாளர்களிடம் அந்தக் கதையைச் சொன்னோம். அந்தக் கதை மீது பலருக்கும் நம்பிக்கை இல்லை. மாதவன் உங்களை வைத்துப் படம் பண்றோம் என்றார்கள். ஆனால், இந்தக் கதை வேண்டாம் என்று கூறினார்கள். அந்தக் கதையில் இருக்கும் இளமை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
'மின்னலே' கதையைச் செய்தே ஆக வேண்டும் என்று முடிவு பண்ணினேன். திறமையான படம் எப்படி அமையும் என்றால் தானாகவே ஒரு கூட்டம் சேரும். அப்படித்தான் ஹாரிஸ் ஜெயராஜ், ராஜசேகர் என்று இணைந்தோம். ஒரு தயாரிப்பாளரும் அமைந்தார். கெளதம் மேனன் கதையையும் முழுமையாக வைத்திருந்தார். ஆகையால் அனைத்து நடிகர்களுக்கும் கதையையும் கொடுத்துவிட்டோம்.
சில நடனக் காட்சிகளின் படப்பிடிப்பைத் தவிர ஒவ்வொரு நாள் படப்பிடிப்புமே அவ்வளவு ஜாலியாக இருந்தது. அந்தப் படம் முடிவடையும்போதே, கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்தியில் ரீமேக் பண்ண வேண்டும் என்றார்கள். அப்போது அதே டீம் இருந்தால் பண்ணுவேன் என்று சொல்லி பண்ணினோம். ஆனால், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியடையவில்லை".
இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.