

'கோப்ரா' படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க் குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார்.
கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இதர காட்சிகளின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் 7 கெட்டப்களில் விக்ரம் நடித்துள்ளார். 'கோப்ரா' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகுமே போதே அனைத்து கெட்டப்களையும் வெளியிட்டது படக்குழு. இதனால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க் குறித்து பேட்டியொன்றில் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியிருப்பதாவது:
"ஒரு காட்சியில் விக்ரம் சாரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு தண்ணீரில் முக்கி முக்கி அடிப்பார்கள். அதில் வாயை வேறு கட்டியிருப்பார்கள். ஆகையால் அவரால் மூச்சும் விட முடியாது. அந்தக் காட்சி எனக்கே பயம். ஆகையால் முதலில் டூப்பை வைத்து நிறைய முயன்றோம். அந்த டூப்பில் 3 விநாடிக்கு மேல் தண்ணீருக்குள் இருக்க முடியவில்லை. தலைகீழாக தண்ணீருக்குள் இறக்கும்போது மூக்கினுள் தண்ணீர் இறங்கும். வாயும் கட்டியிருப்பதால் ஒன்றுமே பண்ணமுடியாது.
அந்தச் சமயத்தில் இந்தக் காட்சியை வேறு மாதிரி மாற்றலாமா என்று கூட யோசித்தேன். விக்ரம் சார் வந்து பார்த்தார். முதல் டேக்கில் நடித்துவிட்டார். 2-வது டேக்கின்போது, அவருடன் நடித்த ஒருவருடைய நடிப்பு தவறாக இருந்தது. இது ஒ.கே சார் எடிட்டிங்கில் வேறு ஏதாவது கட் பண்ணிக் கொள்கிறேன் சார் போதும் என்றேன். அவரோ ஏன் கம்பரமைஸ் பண்ணிக் கொள்கிறீர்கள் என்று மீண்டும் ஒரு முறை நடித்தார். கூட இருந்தவர் சரியாக நடிக்கும் வரை இவர் தலைகீழாகத் தொங்கி நடித்துக் கொண்டிருந்தார். மாலையில் அந்தக் காட்சி எல்லாம் சரியாக எடுத்து முடித்துக் கிளம்பிவிட்டோம். எல்லாம் சரியாக வந்துவிட்டது அல்லவா என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
அடுத்த நாள் படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு ப்ரஷர் செக் பண்ணிக் கொண்டே இருந்தார்கள். ஏனென்றால் முகத்தில் கண்ணுக்கு மேலே இருக்கும் நரம்புகள் ஒரு இடத்தில் நின்றுவிட்டன. ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று என்னை ஆச்சரியப்படுத்திய காட்சி அது".
இவ்வாறு இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.