

திரைப்படத் துறையை மீட்டெடுக்க சதவீத அடிப்படையில் சம்பள முறை வேண்டும் என்று தயாரிப்பாளர் இந்தர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக சதவீத அடிப்படையில் சம்பள முறையை வைத்துப் படமொன்று தயாராகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் கவுரவக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆர்.பி.செளத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இணைந்து திரையுலகினர் மக்களிடையே க்ரவுட் ஃபண்டிங் முறையைப் பின்பற்றித் தயாரிக்கிறார்கள்.
இந்த முயற்சி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து 'குற்றம் 23', 'தடம்', 'கொம்பு வைச்ச சிங்கம்டா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த இந்தர் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"பிரமிட் நடராஜன், ஆர். பி. செளத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் எடுத்துத்திருக்கும் சதவீத அடிப்படை என்ற புதிய முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த சதவீத அடிப்படையில் சம்பளம் என்ற முறை என்பது இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும் நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் துறையில் அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
நமது தமிழத் திரைப்படத் தொழில்துறை கோவிட்-19 என்னும் கொடிய வைரஸ் நோயின் காரணமாக மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதிலிருந்து திரைப்படத்தொழிலை மீட்டெடுக்கத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் உச்சபட்ச நடிகர்கள், பிரசித்தி பெற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அவர்களது சம்பளத்தை சதவிகித அடிப்படையில் பெற்றுக்கொண்டு பணியாற்றினால் தமிழ்த் திரைப்படத் துறையை இப்பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.
இதனால் அதிக தயாரிப்பாளர்கள் திரைப்படங்களை எடுப்பதற்கு முன் வருவார்கள். இதன் மூலம் திரைப்படத் துறையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு பெருகும். தமிழ்த் திரைப்படத்துறை மேலும் வளர்ச்சி பெறும்.
தமிழ்த் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு தயாரிப்பாளர் இந்தர் குமார் தெரிவித்துள்ளார்.