

அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு ஜோதிகா பதிலளித்துள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது படத்தின் கதைக்களம், 2டி நிறுவனம், கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜோதிகா.
அதில், "சமூக சேவையில் சிவகுமார் சாருடைய குடும்பமே சிறந்து விளங்குகிறது. யாருமே அரசியலில் இல்லை. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? அரசியலுக்கு வந்து நல்லது பண்ணலாமே.. அடுத்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா" என்ற கேள்விக்கு ஜோதிகா பதில் கூறியதாவது:
"அரசியலுக்கு வராமல் நிறைய நல்லது பண்ணலாம். அரசியலுக்கு வராமல் உண்மையில் அதிகமாக நல்லது பண்ண முடியும். கண்டிப்பாக தேர்தலில் எல்லாம் போட்டியிடமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அரசாங்கத்தை நம்பி இருக்கக் கூடாது. ஒரு ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்".
இவ்வாறு ஜோதிகா தெரிவித்தார்.