

புருஷோத்தமன் மறைவு தொடர்பாக இளையராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவிடம் நீண்ட காலமாகப் பயணித்த புருஷோத்தமன் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இளையராஜாவிடம் ட்ரம்மராகவும், மேற்பார்வையாளராகவும், ஒலிப்பதிவு செய்பவராகவும் பணியாற்றியவர் புருஷோத்தமன். இளையராஜாவுக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.
தற்போது புருஷோத்தமன் மறைவு தொடர்பாக உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
"என்னுடன் வேலை செய்து வந்த புருஷோத்தமன் 3 நாட்களுக்கு முன் காலமாகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். என்னுடைய வாழ்நாளிலேயே என்னுடைய அருகிலேயே அதிக நாள், அதிக நேரம் இருந்தவர். எங்களுடைய குடும்பத்தாரிடம் நாங்கள் இருந்ததை விட, நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரம்தான் அதிகம்.
ஒவ்வொரு நாளும் எங்களுக்கு இசையிலேயே கழிந்த நேரம் அத்தனையுமே, நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததுதான். நான் இசையமைக்கும் அத்தனையுமே ரெக்கார்ட் செய்து, மொத்தமாக எனக்கு உதவியாக இருந்தார். அவர்தான் என்னுடன் அதிக நேரம் இருந்தவர். புருஷோத்தமன் எந்த நேரத்தில் அழைத்தாலும் என்னுடன் அருகில் வந்து அமர்ந்து, இல்லையென்றால் அவருடைய அருகில் நான் அமர்ந்து ஏராளமான கம்போஸிங் நடந்துள்ளன.
என்னுடைய வாழ்நாளில் எனது குடும்பத்தாருடன் கூட நான் அவ்வளவு நேரம் இருந்தது கிடையாது. வீட்டில் ஒரு முறை மனைவியை அழைப்பதற்குப் பதிலாக புரு என்று அழைத்துவிட்டேன். அவ்வளவு தூரம் நெருக்கமான புருஷோத்தமன் காலமானது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது. அவர் இன்று நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வை இவ்வளவு சீக்கிரம் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இறைவன் அவரை விரைவாகவே அழைத்துக் கொண்டுவிட்டான். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என்னுடைய அழ்ந்த அனுதாபங்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு தனது திருப்பதத்தை அளித்து, அவருடைய காலடியிலே அவரைச் சேர்த்துக் கொள்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த இறையருள் நம் எல்லோரையும் காக்குமாக. அவருடைய ஆன்மா சாந்திடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்".
இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.