

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'டாக்டர்' படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
'ஹீரோ' படத்துக்குப் பிறகு 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன.
'டாக்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் 'கேங் லீடர்' படத்தில் நடித்த ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார். அவர் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது.
இதில் வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களே படப்பிடிப்பு உள்ளது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லாமல் இருந்தால், இந்நேரம் முழு படப்பிடிப்புமே முடிந்திருக்கும். தற்போது இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதால், அதில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இதர காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், தீபாவளிக்கு 'மாஸ்டர்' மற்றும் பொங்கலுக்கு 'அண்ணாத்த' ஆகிய படங்கள் உறுதியாகியுள்ளதால், 'டாக்டர்' படத்தை கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்துக்கு இடையே 'அயலான்' படத்தில் முடிக்க வேண்டிய காட்சிகளிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.