

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் 'தாரை தப்பட்டை' படத்தின் முக்கிய காட்சிகளைப் படமாக்குவதற்கு அந்தமான் செல்ல இருக்கிறது படக்குழு.
'பரதேசி' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் 'தாரை தப்பட்டை' படத்தைத் தொடங்கினார் இயக்குநர் பாலா. இம்முறை படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்துக்கான பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜாவிடம் முடித்து வாங்கினார். வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பாலா இயக்கத்தில் குறைந்த நாட்களில் முடியவிருக்கும் படம் என்று அறிவித்து படப்பிடிப்பு தொடங்கினார்கள். ஆனால், படப்பிடிப்பு சமயத்தில் சசிகுமாருக்கு அடிபட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
சசிகுமார் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய உடன் ஒரு பாடலை மட்டும் பாண்டிச்சேரியில் படமாக்கினார்கள். தற்போது சென்னை துறைமுகத்தில் 5 நாட்கள் படப்பிடிப்பும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13ம் தேதி சுமார் 80 பேர் அடங்கிய படக்குழுவினரோடு அந்தமான் செல்ல இருக்கிறார்கள். அந்தமானில் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
மேலும், இளையராஜா இசையமைப்பில் வெளிவர இருக்கும் 1000-வது படம் என்பதால் 'தாரை தப்பட்டை' இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.