

'நீலவானம்' பாடல் படமாக்கப்பட்ட விதத்தினை கே.எஸ்.ரவிகுமார் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மாதவன், த்ரிஷா, சங்கீதா, ரமேஷ் அரவிந்த், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மன்மதன் அம்பு'. 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தப் படத்தில் இடம்பெற்ற 'நீலவானம்' பாடல் மிகவும் பிரபலம். ஏனென்றால், இந்தப் பாடலை முழுக்க பின்னோக்கி படமாக்கியிருப்பார். ஆனால், பாடல் வரிகளை சரியாக உச்சரித்திருப்பார்கள். இது எப்படி சாத்தியம் என்று பலரும் ஆச்சரியத்துடன் பாராட்டியிருந்தார்.
இதன் படமாக்கல் குறித்து கே.எஸ்.ரவிகுமார் கூறியிருப்பதாவது:
"அந்தப் பாடலில் அவர்களின் கதையையே நாங்கள் பின்னோக்கித்தான் சொல்லியிருப்போம். இப்போது அந்தப் பாடலை நீங்கள் கடைசியிலிருந்து பின்னோக்கிப் பார்த்தால் அப்படியே அவர்களின் கதை சரியான வரிசையில் புரியும். இந்தப் பாடலை எடுப்பதில் எனக்கு வேலை சுலபம் தான். நாங்கள் ஒவ்வொரு ஷாட்டாக பிரித்து எதை எடுக்கப் போகிறோம் என முடிவெடுத்துவிடுவோம். நடிப்பவருக்குத் தான் கடினம்.
ஏனென்றால் பாடலையே தலைகீழாக மனப்பாடம் செய்ய வேண்டும். வேறொரு புதிய மொழியைக் கற்பது போல. இது வெறுமனே எழுத்துக்களை பின் வரிசையில் சொல்வதல்ல. திமுக என்று சொல்லி பதிவிட்டு, அதை பின்னோக்கி ஓட்டிப் பார்த்தால் கமுதி என்று வராது. வேறு மாதிரி ஒலிக்கும். புரியாத மொழியைப் போலத்தான் இருக்கும். அதை மனப்பாடம் செய்ய வேண்டும். மேலும் அந்தப் பாடல் ஸ்லோ மோஷனில் படமாக்க வேண்டும் என்பதால் நிஜத்தில் அதை நடிக்கும்போது வேகமாகப் பாடி நடிக்க வேண்டும்.
புரியாத மொழியை மனப்பாடம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதை லேப்டாப்பில் போட்டு, படமாக்கும் வேகத்துக்கு ஏற்றவாறு அதை பிரித்தால் இன்னும் வேகமாக ஓடும். கமல்ஹாசன் பின்னோக்கிப் பாடியதை பதிவு செய்து, போட்டுப் போட்டுக் கேட்டு, அதை எழுதி, மனப்பாடம் செய்தார். மேலும் பாடல் திரையில் வரும்போது அந்த இடத்தில் என்ன வரிகள் வரும் என்பதையும் எழுதிக் கொள்வார்.
ஒரு இடத்தில் கோயில் என்று வந்தால் அதை குறித்துக் கொள்வார். நடிக்கும்போது சரியாக கையெடுத்துக் கும்பிடுவது போல ஒரு பாவனை செய்வார். அது சரியாக ஒத்துக் போகும். எனவே இது தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பெரிய கடினம் அல்ல. நடிப்பவருக்குத் தான் மிகவும் கடினம்"
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.