'தசாவதாரம்' படத்துக்காக கமல் பட்ட கஷ்டங்கள்: சுவாரசியப் பின்னணி பகிரும் கே.எஸ்.ரவிகுமார்

'தசாவதாரம்' படத்துக்காக கமல் பட்ட கஷ்டங்கள்: சுவாரசியப் பின்னணி பகிரும் கே.எஸ்.ரவிகுமார்
Updated on
2 min read

'தசாவதாரம்' படத்துக்காக கமல் பட்ட கஷ்டங்கள் குறித்து சுவாரசியப் பின்னணி பகிரும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்

2008-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் 'தசாவதாரம்'. இந்தப் படத்தில் கமல் 10 கேரக்டரில் நடித்து, அதிக கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் என்ற சாதனையை புரிந்தார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அசின், மல்லிகா ஷெராவத், ஜெயபிரதா, நாகேஷ், பி.வாசு உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்திருந்தனர்.

இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருந்தார் கமல். இயக்குநர் பொறுப்பை மட்டுமே கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருந்தார். இந்தப் படத்துக்காக கமல் பட்ட கஷ்டங்கள் குறித்து கே.எஸ்.ரவிகுமார் கூறியிருப்பதவாது:

"நான் அதிகமாக பணிபுரிந்த படம் என்றால் அது 'தசாவதாரம்' தான். ஒவ்வொரு ஷெட்டியூலுமே ஒரு படம் எடுக்குற மாதிரி தான். அந்த ஷெட்டியூலில் என்ன கேரக்டர், அதற்கான மேக்கப் என அனைத்துமே சொல்லிவிடுவோம். கமல் சார் ஒரு நாளைக்கு ஒரு கேரக்டர் தான் பண்ணுவார். அடுத்த நாள் தான் அடுத்த கேரக்டர் பண்ணுவோம்.

ஒரு காட்சியில் நிறைய கமல் இருக்கும் போது, ஒரு கேரக்டர் எடுத்து முடித்துவிடுவோம். அடுத்த நாள் வேறு கேரக்டர் மேக்கப் போட்டு அதே காட்சியை மீண்டும் எடுப்போம். ஒரு காட்சியில் 5 கமல் இருக்கிறார் என்றால் 5 நாட்கள் படப்பிடிப்பு செய்ய வேண்டும். 5 தடவையும் வெவ்வேறு மாதிரி படமாக்க வேண்டும். முதலில் எந்த கதாபாத்திரத்துடன் யார் லிங்க் இருக்கிறது என்று பார்த்துவிட்டு, அது வரைக்கு ப்ளூ மேட் போட்டு எடுத்துவிடுவோம்.

குள்ளமாக பாட்டி கேரக்டர் பண்ணும் போது "PAIN இல்லாமல் எப்படி சார் GAIN வரும்" என்று சிரிப்பார். ஜீப்பில் பின்னால் குள்ள கமல் உட்கார்ந்திருக்கும் காட்சி ஒன்று வரும். குள்ள கமல் என்றால் அந்தக் காட்சியை படமாக்கி சுருக்குவோம். அப்போது தான் குள்ள கமலாக தெரியும். அந்தக் காட்சியில் முன்னால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இருக்கும். முன்னால் உள்ள கமல் குடிக்கும் போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலாகவும், குள்ள கமல் குடிக்கும் போது 1.3 லிட்டர் பிடிக்கும் தண்ணீர் பாட்டிலாக தயார் செய்து ஷூட் பண்ணினோம். இந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியும் பணிபுரிந்தோம்.

இந்த மாதிரியான காட்சிகளில் எடுப்பவர்களை விட நடிப்பார்களுக்குத் தான் கஷ்டம். அவ்வளவு கஷ்டப்பட்டு நடிப்பதால் தான் அவருக்கு உலக நாயகன் என்று பெயர் கொடுத்தோம். ஆரம்பத்தில் வரும் 12-ம் நூற்றாண்டு காட்சிகள் தான் யானைகள், குதிரைகள் என வைத்து கொஞ்சம் கஷ்டமில்லாமல் இயக்கினேன். 'தசாவதாரம்' படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சிகள் மட்டுமே கஷ்டமின்றி இயக்கினேன். மீதி காட்சிகள் அனைத்துமே கஷ்டம் தான்"

இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in