

'சந்திரமுகி' 2-ம் பாகத்தில் நடிக்கிறேனா என்ற கேள்விக்கு ஜோதிகா பதிலளித்துள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. தற்போது 'சந்திரமுகி' படத்தின் 2-ம் பாகம் உறுதியாகியுள்ளது.
பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் இடையே ஆன மோதலை அடிப்படையாகக் கொண்டு கதைகளத்தை அமைத்துள்ளார் பி.வாசு. முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்து பெரும் பெயர் மற்றும் விருதுகள் வென்றார். அவர் 2-ம் பாகத்தில் நடிப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
'பொன்மகள் வந்தாள்' படத்தை விளம்பரப்படுத்த ஜோதிகா அளித்த பேட்டியில், 'சந்திரமுகி 2'-வில் நடிக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "'சந்திரமுகி' 2-ம் பாகத்தில் நான் இல்லை என நினைக்கிறேன். எனக்கு எந்தவொரு தகவலுமே இல்லை. அந்தப் படத்துக்காக இதுவரை யாருமே கேட்கவும் இல்லை" என்று பதிலளித்தார் ஜோதிகா.
"நீங்கள் நடிக்கவில்லை என்றால், யார் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜோதிகா "சிம்ரன் நடிப்பதால் பிரமாதமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்