

'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து அஜித் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரையும் வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம் 'பாகுபலி'. இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது.
செப்டம்பர் 15ம் தேதி முதல் 'பாகுபலி 2' படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் படப்பிடிப்பின் போதே, இரண்டாம் பாகத்துக்கான 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தாண்டு இறுதிக்குள் 'பாகுபலி 2' மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ராஜமெளலி.
ராஜமெளலி இயக்கும் அனைத்து படங்களுக்குமே அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் தான் மூலக்கதை எழுதிவந்தார்.
இந்நிலையில், விஜயேந்திர பிரசாத் தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள வீடியோ பேட்டியில், "'பாகுபலி 2'வைத் தொடர்ந்து அடுத்த படம் என்ன? அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறாரே ராஜமெளலி" என்ற கேள்விக்கு "ஆமாம். பேசிட்டு இருக்கிறோம். சமூக கருத்துள்ள படம் ஒன்றை கமர்ஷியல் விஷயங்கள் குறைவாக வைத்து பண்ணவேண்டும்" என்று தெரிவித்தார் ராஜமெளலி.
தமிழில் அஜித் இல்லையென்றால் வேறொரு நடிகர், தெலுங்கில் அல்லு அர்ஜுன் வைத்து இருமொழிகளிலும் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்" என்று பதிலளித்திருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
'பாகுபலி' படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்த இயக்குநர் ராஜமெளலி, அஜித்தை இருமுறை சந்தித்து பேசியிருப்பதாகவும், மிகவும் எளிமையான மனிதர் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது