

அறிக்கை யுத்தம் வேண்டாம், பேரழிவைக் கடப்போம் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தி வருவதால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை அமேசான் நிறுவனம் நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்கு கைப்பற்றியது.
தமிழில் 'பொன்மகள் வந்தாள்' மற்றும் 'பெண்குயின்' ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. இந்த வெளியீட்டால் திரையங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கடும் அறிக்கைப் போர் ஏற்பட்டது. இன்னும் திரையரங்க உரிமையாளர்கள் இதில் சமரசம் செய்துக் கொள்ளவில்லை.
தற்போது இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர.பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆன்லைன் வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீடு இரண்டும் வெவ்வேறு களங்கள். ஒருவேளை யாராவது இதற்கு கவலைப்படவேண்டுமென்றால் அது திரையரங்கம் சாராதவர்கள் தான். திரையரங்கங்களுக்காக ஒரே மூலதனம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டுமே. இந்த இரு தரப்பும் வாழ்க்கை முழுவதும் இணைந்து இருக்கவேண்டியவர்கள். எனவே அறிக்கை யுத்தம் செய்வதை விடுத்து இந்த பேரழிவைக் கடப்போம்"
இவ்வாறு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.