எம்.எஸ்.விஸ்வநாதனின் எளிமை: இயக்குநர் வஸந்த் சிலாகிப்பு

எம்.எஸ்.விஸ்வநாதனின் எளிமை: இயக்குநர் வஸந்த் சிலாகிப்பு
Updated on
1 min read

எம்.எஸ்.விஸ்வநாதனின் எளிமை தொடர்பாக இயக்குநர் வஸந்த் சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்.

'கேளடி கண்மணி', 'ஆசை', 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'ரிதம்' உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற பல படங்களை இயக்கியவர் வஸந்த். தற்போது 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றுள்ளது.

இன்னும் தமிழகத்தில் வெளியாகவில்லை. கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊரடங்கில் சுதா ரகுநாதனுடன் நேரலை கலந்துரையாடலில் கலந்துகொண்டார் இயக்குநர் வஸந்த்.

இதில் இயக்குநர் பாலசந்தர் மற்றும் தனது இயக்கத்தில் வெளியான படங்களின் அனுபவங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் எவ்வளவு எளிமையானவர் என்பது குறித்து ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அந்தச் சம்பவம் தொடர்பாக இயக்குநர் வஸந்த் கூறியிருப்பதாவது:

"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களைப் பார்ப்பதற்காக மலேசியாவிலிருந்து சிலர் வந்திருந்தனர். என்னை அணுகி அவரைச் சந்திக்க வேண்டும் என்றனர். என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இவர்களை அழைத்துக்கொண்டு வரட்டுமா என்று அவரிடம் கேட்டேன். அவர் சரி என்றார். அடுத்த நாள் மாலை 6 மணிக்குச் சென்றேன். அப்போது அவர் இவர்களுக்காகக் காத்திருந்தார். வேட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகச் சாலையில் நடந்து கொண்டிருந்தார்.

என்ன அண்ணா ரோட்டில் நிற்கிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் வருகிறீர்களே, உங்களை வரவேற்க வேண்டாமா என்றார். அவரைப் போன்ற ஒரு சகாப்தம் இருக்க முடியுமா, எத்தனை பாடல்கள், எத்தனை வெற்றிகள். அவ்வளவு பெரிய மனிதரின் எளிமையைப் பாருங்கள்".

இவ்வாறு இயக்குநர் வஸந்த் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in