பல்வேறு போராட்டங்களைக் கடந்து 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பு நிறைவு

பல்வேறு போராட்டங்களைக் கடந்து 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

பல்வேறு கட்டப் போராட்டங்களைக் கடந்து 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது படக்குழு.

ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆடுஜீவிதம்'. இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு, சில முக்கியமான காட்சிகளைப் படமாக்க ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது படக்குழு.

ஆனால், அந்தச் சமயத்தில்தான் கரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் பரவியது. ஜோர்டனில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் மூலம் படப்பிடிப்பு க்குழுவின் ஆரோக்கியம் பற்றிக் கேட்டறியப்பட்டது. அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருந்ததால் படப்பிடிப்பைத் தொடர்ந்தது படக்குழு.

அந்தச் சமயத்தில் ஜோர்டன் அரசின் புதிய முடிவால், இந்தப் படத்தில் நடிக்கும் முக்கிய வெளிநாட்டு நடிகர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பாலைவனத்தில் ஒரு கூடாரத்தில் நாட்களைக் கடத்தியது படக்குழு. படக்குழுவினரை மீட்டுச் செல்ல உதவுமாறு இயக்குநர் ப்ளெஸ்ஸி கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் கேரள முதல்வருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், ஜோர்டன் அரசு சில விதிகளைத் தளர்த்திய நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. தற்போது பல்வேறு போராட்டங்களைக் கடந்து 'ஆடுஜீவிதம்' படத்தின் ஜோர்டன் காட்சிகள் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.

இது தொடர்பாக படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ப்ரித்விராஜ், '' 'ஆடுஜீவிதம்' ஜோர்டன் படப்பிடிப்பு முடிவடைந்தது" என்று பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழுவினர் விரைவில் இந்தியாவுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆடுஜீவிதம்' படக்குழுவினரின் கடிதம் மற்றும் ப்ரித்விராஜின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு மலையாளத் திரையுலகினர் ஆறுதல் கூறி வந்தனர். தற்போது படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருப்பதால், பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

#Aadujeevitham Schedule Pack up!

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in